Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகருக்கான 3-ஆவது குடிநீர்த் திட்டம் மாற்றியமைப்பு

Print PDF

தினமணி           24.12.2014

மாநகருக்கான 3-ஆவது குடிநீர்த் திட்டம் மாற்றியமைப்பு

மதுரை மாநகருக்கான 3-வது குடிநீர் திட்டத்தை வைகையிலிருந்தே செயல்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு, ரூ.290 கோடியில் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மேயர் விவி ராஜன்செல்லப்பா தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சியின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை சமூக அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியருடன் மேயர் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாணவ, மாணவியர் எழுப்பிய வினாக்களுக்கு மேயர் பதிலுரையில் கூறியது:

மதுரை மாநகராட்சி முன்பு 72 வார்டுகளுடன் சுமார் 50 சதுர கிமீ தொலைவைக் கொண்டிருந்தது. மக்கள்தொகை 10 லட்சமாக இருந்தது. புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுடன் தற்போது மாநகராட்சி எல்கை 149 சதுர கிமீ ஆகவும், மக்கள் தொகை 16 லட்சமாகவும் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் மூலம் பல்வேறு நிதியுதவிகள் பெறப்பட்டு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 மாநகராட்சி பகுதியில் வசூலிக்கப்படும் வரி வருவாய் மூலம் ஊழியர்களுக்கான சம்பளம் மாதம் ஒன்றுக்கு ரூ.12 கோடி வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளாக வரி வருவாயில் நிலுவை இருக்கிறது. இதுவரை ரூ.100 கோடி வரை வரி வருவாய் நிலுவை உள்ளது. இந்த தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதியில் கடந்த காலங்களில் விடுபட்ட கட்டடங்கள், வணிக கட்டடங்களுக்கு வரிவிதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வரி மாற்றம் செய்யப்படாமல், பழைய வரிவிதிப்பு முறையே பின்பற்றப்படுகிறது. புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் வரிவிதிப்பில் மாற்றம் செய்யப்படவில்லை. இப்பகுதிகளில் ரூ.19 கோடியில் 4 ஆயிரம் புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இப்பணியை முடிக்தவுடன், இப்பகுதிகளில் சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியின் முந்தைய 72 வார்டு பகுதிகளுக்கு 2 வைகை குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில், 3-வது குடிநீர் திட்டத்தை முல்லைப் பெரியாறிலிருந்து செயல்படுத்த ரூ.580 கோடியில் முதலில் திட்டம் தயாரிக்கப்பட்டது. திட்ட நிதி அதிகமாக இருப்பதுடன், திட்டத்தை செயல்படுத்த பல்வேறு நடைமுறை சிக்கல்கள் குறித்து உயர்அதிகாரிகள் அறிவுறுத்தியதன் பேரில், இத்திட்டம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தையும் வைகையிலிருந்தே செயல்படுத்த ரூ.290 கோடியில் புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ஏற்கெனவே வைகையில் மாநகர் குடிநீருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவையும் அதிகரிக்க அரசுக்கு கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 2 குடிநீர் திட்டங்கள் மூலம் தினமும் 115 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு செய்து மாநகரில் விநியோகம் செய்யப்படுகிறது. இத்துடன் 3-வது திட்டத்துக்காக மேலும் தினமும் 61 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கும் வகையில் ஒதுக்கீடு செய்ய கோரப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 மண்டலங்களிலும் 100 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டுள்ளன, என்றார்.

மாண்புமிகு உத்தரவு வந்தது

மேயர் தொடர்ந்து கூறுகையில், அரசிடமிருந்து இன்று புதிய உத்தரவு வந்துள்ளது. இதுவரை மேயர் பதவி வணக்கத்திற்குரிய என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வந்தது. இனிமேல், இப்பதவி மாண்புமிகு என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் என அரசின் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது, என்றார்.

இட்லி கடைகள் மீது பரிவு

மதுரை மாநகராட்சி பகுதியில் அதிக அளவில் சாலையோரங்களில் இட்லி கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இந்த கடைகளை மாநகராட்சியினர் அகற்றுவதும், மறுநாளே அதே இடத்தில் கடைகள் மீண்டும் வைக்கப்படுவதும் வாடிக்கையாக நடக்கிறது. மதுரையின் பெருமைகளில் இட்லியும் ஒன்றாக இருக்கிறது. இதனால், இந்தக் கடைகளில் கடுமை காட்ட இயலவில்லை. அதேசமயம் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது, என மேயர் தெரிவித்தார்.