Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழை நிவாரணம் ரூ. 19.62 கோடி தேவை! அரசுக்கு மாநகராட்சி அறிக்கை

Print PDF

தினமலர்        03.11.2014

மழை நிவாரணம் ரூ. 19.62 கோடி தேவை! அரசுக்கு மாநகராட்சி அறிக்கை

கோவை : கோவை மாநகரப்பகுதியில், மழை காரணமாக சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம், 19.62 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளது.

கோவை மாநகரப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு பின், இந்தாண்டு கன மழை பெய்துள்ளது. இதனால், கோவையில் அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு தவிர, பெரும்பாலான நெடுஞ்சாலைத்துறை ரோடுகளும், மாநகராட்சி ரோடுகளும் உருக்குலைந்தன.மாநகரத்தில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்ட பகுதிகளில், புதிதாக போடப்பட்ட ரோடுகளில், மண் இறுகி ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை நீர் தேங்கி நிற்பதாலும், மழை வெள்ளம் சென்றதாலும் தார் ரோடுகள் பெயர்ந்துள்ளன. பாதாள சாக்கடை பணி முடிந்து, ரோடு அமைக்கப்படாத பகுதிகளில், சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயிக்கற்ற நிலையில் ரோடுகள் உள்ளன.

தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. முக்கிய இடங்களில் மழைநீர் வடிகால் வசதியும், மழைநீர் சேகரிப்பு திட்டமும் அமைக்கப்படாததால், பல நாட்களாக தண்ணீர் தேங்கி, சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது.மழைக் காலம் முடிந்ததும், ரோடு, சாக்கடை புதுப்பிக்கும் பணிகளும், சாக்கடை துார்வாரும் பணியும், ரோடுகளில், 'பேட்ச் ஒர்க்' பணியும் துவங்க வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது. மழையால் பாதித்த ரோடுகளை புதுப்பிக்க, மழை நிவாரண நிதி பெறுவதற்காக, மாநகராட்சி நிர்வாகம் பட்டியல் தயாரித்துள்ளது.

மாநகரத்தில், பெரும்பாலான ரோடுகள் சீர்குலைந்துள்ளதால், உடனடி நிவாரணமாக, 5.28 கோடி ரூபாய், நிரந்தர நிவாரணத்திற்காக 14.34 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.மழை நிவாரண பணிகளுக்காக மாநில அரசு முதற்கட்டமாக 60 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில், கோவை மாநகராட்சி தயாரித்துள்ள 19.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில், எவ்வளவு நிதி கிடைக்கும் என்பது, பாதிப்பின் தன்மை, முக்கியத்துவம் மற்றும் முதல்வரின் முடிவை பொருத்துள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மாநகராட்சி பொதுநிதி, பல்வேறு திட்டங்கள் மூலமும் ரோடு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மழை நிவாரணத்திற்காக இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நிவாரண நிதி பகிர்ந்து வழங்கும் போது, கோவைக்கு எவ்வளவு கிடைக்கும் என்பது தெரியாது' என்றனர்.