Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பையைத் தரம் பிரித்தளிக்க தொடர் விழிப்புணர்வு பிரசாரம்: மாநகராட்சி ஏற்பாடு

Print PDF

தினமணி        03.11.2014

குப்பையைத் தரம் பிரித்தளிக்க தொடர் விழிப்புணர்வு பிரசாரம்: மாநகராட்சி ஏற்பாடு

சென்னையில் குப்பையைத் தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக, தொடர் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் ஒவ்வொரு நாளும் சராசரியாக சுமார் 4,900 கிலோ குப்பைகள் சேருகின்றன. இந்தக் குப்பைகள் அனைத்தும் பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்படுகின்றன.

வளர்ந்த நாடுகளில் குப்பைகளைத் தரம் பிரித்து, மறு சுழற்சி செய்து பயன்படுத்துகிறார்கள். அதனால் குப்பையின் அளவு குறைகிறது.

ஆனால், சென்னையில் சேரும் அனைத்துக் குப்பைகளும் அப்படியே கொட்டப்படுகின்றன. மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தனித்தனியாகப் பிரிக்கப்படுவதில்லை.

அவ்வாறு பிரிக்கப்பட்டால், மக்கும் குப்பைகள் உரம், இயற்கை எரிவாயு தயாரிக்கவும், மக்காத குப்பைகள் மறு சுழற்சிக்கும் பயன்படுத்தலாம்.

சென்னையில் குப்பையைத் தரம் பிரித்து வழங்க பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல், திட்டங்கள் தோல்வியடைகின்றன.

இதுகுறித்து பெரிய அளவிலான விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:

சென்னையில் குப்பையைத் தரம் பிரித்து வழங்கவேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை. பல திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் உள்ளன.

ஆனாலும், சில இடங்களில் சிறிய அளவில் குப்பைகளைத் தரம் பிரிக்கும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வாறு பிரிக்கப்படும் குப்பையில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கப்படுகிறது.

இதேபோல, அனைத்து வார்டுகளிலும் குப்பையில் இருந்து எரிவாயு தயாரித்து, அம்மா உணவகங்களுக்குப் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை பெரிய அளவில் செய்ய வேண்டுமென்றால் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பொதுமக்களே பிரித்துப் போடவேண்டும். அவ்வாறு போடும் போது, குப்பையில் இருந்து கணிசமான வருவாய் மாநகராட்சிக்கு கிடைக்கும்.

இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பெரிய அளவிலான விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்படும். குறைந்தது 6 மாதங்களுக்காவது பிரசாரம் செய்ய வேண்டும்.

மக்கள் திரும்பும் இடத்தில் எல்லாம் பிரசாரம் தென்படவேண்டும். இதற்கு அதிக அளவிலான நிதி தேவை.

இதற்கான செலவு, நிதி ஆதாரம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் பிரசாரம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2000-ஆம் ஆண்டில் சராசரியாக தினமும் 2,600 கிலோ குப்பை சேகரிக்கப்பட்டது. ஆனால், அதுவே 2014-ஆம் ஆண்டில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.