Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இயற்கை பேரிடர் நிதி ரூ.188 கோடியில் 1,000 வீடுகள் கட்ட திட்டம்

Print PDF

தினமணி       24.09.2014

இயற்கை பேரிடர் நிதி ரூ.188 கோடியில்  1,000 வீடுகள் கட்ட திட்டம்


புதுச்சேரியில் இயற்கை பேரிடர் நிதி ரூ.188 கோடியில் 1,000 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது என முதல்வர் ரங்கசாமி கூறினார்.

 புதுச்சேரி சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் இதுகுறித்து அதிமுக உறுப்பினர் அன்பழகன் பேசியது:

 இயற்கை பேரிடர் நிதியாக ரூ.188 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த நிதியை எந்த திட்டங்களுக்கு அரசு செலவு செய்யப் போகிறது?

 முதல்வர் ரங்கசாமி: இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படாத வகையில் கூரை வீடுகளுக்கு பதிலாக சுமார் ஆயிரம் கல் வீடுகள் கட்டுதல், தீயணைப்புத் துறைக்காக வானுயர் ஏணி, அவசர உதவி வண்டி, அத்தியாவசிய தீயணைப்புக் கருவிகள் வாங்குதல், வெங்கட்டா நகர் துணை மின்நிலையத்திலிருந்து கரையோர நகரப் பகுதிகளில் உள்ள குறைந்த மின் அழுத்த பாதைகள் மற்றும் நுகர்வோரின் மின் இணைப்புகளை புதைவடமாக மாற்றுதல், புதுவை மின் துறையில் அவசர கால கட்டுப்பாட்டு அறை அமைத்தல், நோணாங்குப்பம், அரியா ங்குப்பம், தவளகுப்பம் பழைய பாலங்களை புதுப்பித்தல், வைத்திக்குப்பம் சிறுபாலத்தை மறுகட்டமைப்பு செய்தல், அதே பகுதியில் சோலை நகரில் உள்ள சிறு பாலத்தை மறுகட்டமைப்பு செய்தல், புதுவை மீன்பிடி துறைமுகத்தில் படகு சறுக்குப்பாதை, படகு நிறுத்தும் தளம், படகு பழுதுபார்க்கும் கூடம், மின்கட்டுப்பாட்டு அறை, படகு விசை இழுவை அறை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கடற்கரை குபேர் சாலை நகராட்சி கட்டடம் புதுப்பித்தல், பழைய மீன் அங்காடிகளை மேம்படுத்துதல், காரைக்காலில் நவீன சுகாதார மீன் அங்காடி, மீன்பிடி துறைமுகத்தில் சறுக்குப் பாதை, படகு பழுதுபார்க்கும் கூடம், மின்கட்டுப்பாட்டு அறை கட்டுதல், நேரு அங்காடியை புதுப்பித்தல், மீன்பிடி துறைமுகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படவுள்ளன என்றார்.
 உறுப்பினர்கள் நாஜிம், லட்சுமிநாராயணன், அன்பழகன், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் தங்கள் பகுதிகளிலும் இத்திட்டத்தின் கீழ் பணிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். காங்கிரஸ் உறுப்பினர்கள், மாஹே, ஏனாமுக்கு இந்த நிதியில் திட்டங்களை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து பேசிய முதல்வர் ரங்கசாமி, தற்போதைய திட்டங்களை மாற்றியமைத்து பிற தொகுதிகளிலும் திட்டங்களை கொண்டு வரலாம்.

 இதுகுறித்து உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.