Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 111 கோடியில் புதிய திட்டங்கள்

Print PDF

 தினமணி      24.09.2014

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 111 கோடியில் புதிய திட்டங்கள்

சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.111 கோடி செலவில் தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அலுவலக கட்டடத்தையும், கம்பம் நகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகளையும் காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் ஜெயலலிதா.

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், ரூ. 111 கோடியில் பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சியில் ரூ. 3 கோடியில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம், கம்பம் நகராட்சியில் ரூ. 2.25 கோடியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகளை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இந்தக் குடிநீர் திட்டத்தின் மூலம் கம்பம் பகுதியைச் சேர்ந்த 69,183 மக்கள் பயனடைவார்கள்.

கோவையில்...கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ. 3.24 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன மொத்த மீன் விற்பனை அங்காடிக் கட்டடம், உக்கடம் பேரூர் புறவழிச்சாலை பிரிவு சந்திப்பு முதல் கோவை புதூர் வரையில் ரூ.12.75 கோடியில் 9.7 கிலோ மீட்டர் நீளமுள்ள புறவழிச்சாலை, கோவைபுதூர் சுண்டக்காமுத்தூர், நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ. 2.25 கோடியில் கட்டப்பட்டுள்ள உயர்நிலைப் பாலம், மதுரை, தூத்துக்குடி மாநகராட்சிகளில் ரூ. 3 கோடியே 3 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மண்டல அலுவலகக் கட்டடங்கள், நீலகிரி மாவட்டம் - உதகமண்டலம், ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலம் மற்றும் திருவாரூர் மாவட்டம் - திருத்துறைப்பூண்டி ஆகிய நகராட்சிகளில் ரூ. 3.40 கோடியில் அலுவலகக் கட்டடங்கள், சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம், அய்யாசாமி தெருவில் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மருத்துவமனை கட்டடம், சூரமங்கலத்தில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ. 35 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.

தருமபுரி, திருப்பூர், வேலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 16 பேரூராட்சிகளில் ரூ. 3.78 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டடங்கள், நவீன சுகாதார வளாகங்கள், குடிநீர் அபிவிருத்திப் பணிகள், வணிக வளாகம் நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியில் ரூ. 2.50 கோடியில் பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடங்கள் என மொத்தம் ரூ. 31.60 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள்: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கோயம்புத்தூர் மாவட்டம் - ஒடையகுளம் பேரூராட்சி, திருப்பூர் மாவட்டம் - குன்னத்தூர் பேரூராட்சி, நாமக்கல் மாவட்டம் - பாண்டமங்கலம் பேரூராட்சி, கன்னியாகுமரி மாவட்டம் - மண்டைக்காடு பேரூராட்சி, தூத்துக்குடி மாவட்டம் - திருச்செந்தூர் பேரூராட்சி ஆகிய 5 பேரூராட்சிகளில் வசிக்கும் 54,592 மக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 14.41 கோடியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டங்களை முதல்வர் தொடங்கிவைத்தார்.

திடக் கழிவிலிருந்து மின்சாரம்: திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ. 55 கோடியில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படவுள்ள திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்ககத்தின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்த 250 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் தொடங்குவதற்கு ரூ. 5.11 கோடி சுழல் நிதியினை வழங்கும் அடையாளமாக 7 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு காசோலைகளை முதல்வர் வழங்கினார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் ரூ.33.50 லட்சம் செலவில் ஏற்படுத்தப்பட்ட பெரு வலைதளத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

வல்லமை செய்தி இதழ்: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள உதவும் வகையிலும் "வல்லமை' என்ற பெயரில் புதிதாக வெளிவரும் காலாண்டு செய்தி இதழை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திறந்தும், துவக்கியும், அடிக்கல் நாட்டியும் வைக்கப்பட்ட பணிகளின் மொத்த மதிப்பு ரூ. 111 கோடியே 70 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

Last Updated on Wednesday, 24 September 2014 05:39