Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இறைச்சி அறுக்கும் கூடங்களை கண்காணிக்க குழு! நகராட்சி நிர்வாகக் கூடுதல் இயக்குனர் உத்தரவு

Print PDF

 தினமலர்      19.08.2014

இறைச்சி அறுக்கும் கூடங்களை கண்காணிக்க குழு! நகராட்சி நிர்வாகக் கூடுதல் இயக்குனர் உத்தரவு

 பதிவு செய்த நாள்

19 ஆக
2014
02:54

கடலூர் : இறைச்சி அறுக்கும் கூடங்களில் சுகாதாரம் மற்றும் பிராணிகள் வதைக்கப்படுவதைத் தவிர்த்திட நகராட்சி அளவில் கண்காணிப்புக் குழு அமைக்க நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இறைச்சிக் கூடங்கள் தனியாக இயங்கி வருகிறது. இங்கு அறுக்கப்படும் கால்நடைகள், சுகாதாரத்துறை ஆய்வாளரின் ஆய்விற்கு பிறகே அறுத்து முத்திரையிட்டு கறி விற்பனை செய்ய வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு வரை நடைமுறையில் இருந்த இத்திட்டம் காலப்போக்கில் கைவிடப்பட்டது.இதனால், ஆடு, மாடுகள் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் சுகாதாரமற்ற இடங்களில் அறுக்கப்பட்டு அதே பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது.பல நேரங்களில், இறந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை அறுத்து கறியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை உண்போர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.இவை அனைத்திற்கும் மேலாக, இறைச்சிக்காக கொண்டுவரப்படும் கால்நடைகள் சுகாதாரமற்ற இடங்களில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறது.இதனை தவிர்த்திடவும், கால்நடைகளை சுகாதாரமான இடங்களில் அறுத்திடவும், இறைச்சிக்குக் கொண்டு வரப்படும் கால்நடைகள் வதைப்பதை முறைப்படுத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இறைச்சிக் கூடங்களில் 50 முதல் 100 கால்நடைகளை அறுத்திட 2,400 சதுர அடி இடம், 101 முதல் 200 கால்நடைகளுக்கு 4,800 சதுர அடி, 201 முதல் 400 கால்நடைகளுக்கு 9 கிரவுண்ட், 401 முதல் 600 கால்நடைகளுக்கு ஒரு ஏக்கர், 600க்கு மேற்பட்ட கால்நடைகள் அறுத்திட 2 ஏக்கர் பரப்பளவு இட வசதி இருக்க வேண்டும்.மேலும், அறுவைக் கூடம் மற்றும் இறைச்சி விற்பனைக் கூடம் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் பராமரித்திட வேண்டும். இதனைக் கண்காணித்திட மாநில மற்றும் மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழு அமைக்க உத்தரவிட்டனர். அதன்பேரில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் தமிழகத்தில் தலைமைச் செயலர் தலைமையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சுகாதாரம், உணவு பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 21 துறை அதிகாரிகளை கொண்டு மாநில அளவில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதி சோலைமலை உள்ளார்.

இக்குழு கடந்தாண்டு நவம்பர் 22ம் தேதி மற்றும் கடந்த ஜூன் 17ம் தேதிகளில் கூடி, மாவட்ட அளவிலும், மாநகராட்சி மற்றும் நகராட்சி அளவில் அந்தந்த பகுதி அதிகாரிகளைக் கொண்டு கண்காணிப்புக் குழு அமைத்து இறைச்சிக் கூடங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.அதன்பேரில், மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையிலும், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் ஆணையர்கள் தலைமையில் குழு அமைத்து, இறைச்சிக் கூடங்கள் மற்றும் விற்பனை நிலையங்களை கண்காணித்து மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்திட, நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து நகராட்சிகளிலும் விரைவில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட உள்ளது.