Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூரு மாநகராட்சி வளர்ச்சிக்கு ரூ. 1527 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி            17.02.2014

பெங்களூரு மாநகராட்சி வளர்ச்சிக்கு ரூ. 1527 கோடி ஒதுக்கீடு

பெங்களூரு மாநகராட்சி வளர்ச்சிக்கு நிதிநிலை அறிக்கையில் ரூ. 1,527 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு:

பெங்களூரு மாநகராட்சி வளர்ச்சிக்கு நிதிநிலை அறிக்கையில் ரூ. 1,527 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வாகன நெரிசலைக் குறைக்க ரூ. 500 கோடியில் சீரான சாலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ. 300 கோடியில் சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ரயில்வேத் துறையுடன் இணைந்து தேவையான பகுதிகளில் ரயில் பாதைகளின் குறுக்கே மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ. 100 கோடியில் சாலையோர நடைபாதை மேம்படுத்தப்படும். ரூ. 300 கோடியில் 12 முக்கியச் சாலைகள் சீரமைக்கப்படும். ரூ. 250 கோடியில் மாநகராட்சியில் இணைந்துள்ள பின்தங்கிய பேருராட்சி, நகராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

31 ஏரிகளை புனரமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கப்படும். வாகன நிறுத்தக் கொள்கையை அமல்படுத்த ரூ. 10 கோடி ஒதுக்கப்படும். திடக்கழிவு மேலாண்மைக்காக ரூ. 100 கோடி ஒதுக்கப்படும்.

ரூ. 200 கோடியில் பெங்களூருவில் வாகன நெரிசல் உள்ள முக்கிய சதுக்கங்களில் சாலை தடுப்புகள் அமைக்கப்படும். பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் மூலம் 8 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளும், கெம்பேகெüடா லேஅவுட்டில் 5 ஆயிரம் வீட்டுமனைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

பெங்களூருவில் உள்ள 54 ஏரிகள் வேலி அமைத்து பாதுகாக்கப்படும். 39 ஏரிகளை மேம்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கப்படும். ஜெய்கா நிறுவன உதவியுடன் ரூ. 5,800 கோடியில் வெளி வட்டச்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜவகர்லால் நேரு தேசிய நகர வளர்ச்சித் திட்டத்தில் தும்கூர் சாலையில் உள்ள கொரகுண்டன பாளையத்தில் ரூ. 125 கோடியில் சுரங்கப் பாதை அமைக்கப்படும். மாநகராட்சியில் புதிதாக இணைந்துள்ள 110 கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்ய தேவையான திட்ட விவர அறிக்கை தயாரிக்கப்படும்.

300 மில்லியன் லிட்டர் குடிநீர் சுத்தகரிப்பு மையம் அமைக்கவும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். நிதியாண்டில் 180 மி.லிட்டர் குடிநீர் சுத்தகரிப்பு செய்வதற்கான பணிகள் தொடங்கப்படும்.

மாநகராட்சியில் 108 இடங்களில் சிறு, குறு குடிநீர் சுத்தகரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.