Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அம்மா திட்டம், இரவு நேர துப்புரவு பணியில் முறைகேடுகள் புகார்: ஆணையாளர் நடவடிக்கை

Print PDF

தினமணி             12.02.2014

அம்மா திட்டம், இரவு நேர துப்புரவு  பணியில் முறைகேடுகள் புகார்:  ஆணையாளர் நடவடிக்கை

மதுரை மாநகராட்சி பகுதியில் அம்மா திட்டம் மற்றும் இரவு நேர துப்புரவுப் பணிகளில் முறைகேடுகளுக்கு இடம் கொடுக்காமல் பணியாற்றுமாறு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையர் கிரண்குராலா உத்தரவிட்டார்.

மதுரை மாநகராட்சி பகுதியில் அம்மா திட்டம் மற்றும் பேருந்து நிலையங்கள், சாலையோரங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மணல், குப்பைகளை அகற்றும் பணியில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த ஒப்பந்தப் பணியில் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வரை மாநகராட்சி நிதியில் முறைகேடு நடப்பதாகவும் புகார்கள் கூறப்படுகிறது. மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஆள்களை பணியில் ஈடுபடுத்திவிட்டு, 4 முதல் 5 மடங்கு வரை கூடுதலாக ஆள்கள் பணியாற்றுவதாக போலியான பட்டியல்கள் மூலம் இந்த முறைகேடுகள் நடப்பதாக மாநகராட்சி ஆணையருக்கு புகார்கள் சென்றுள்ளன.

இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை இரவு பெரியார் பேருந்து நிலையத்தில் துப்புரவு பணியை ஆணையர் கிரண்குராலா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மேயர் விவி ராஜன்செல்லப்பாவும் பங்கேற்றார்.

பெரியார் பேருந்து நிலையம், நேதாஜி சாலை, டவுன்ஹால் ரோடு, நான்கு மாசி வீதிகள், டிபிகே சாலை, மேலவெளி வீதி, மேலமாரட் வீதி பகுதிகளில் இரவு 9 மணி முதல் அதிகாலை 1 மணி வரை 50 ஒப்பந்த தொழிலாளர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருப்பதாக ஆணையரிடம் கணக்கு சொல்லப்பட்டது. ஆனால், திங்கள்கிழமை ஆணையர் முன்னிலையில் 30 தொழிலாளர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. முறைகேடுகளுக்கு இடமின்றி துப்புரவு பணி நடைபெற வேண்டும். கணக்கு காண்பிக்கப்படும் எண்ணிக்கையிலான ஒப்பந்த தொழிலாளர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். 4 மண்டலங்களிலும் இதை கண்டிப்புடன் அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக, மாநகராட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.