Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழைநீர் ஆதாரத்தை பெருக்க ரூ.98.44லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார்

Print PDF

தினகரன்                03.02.2014

மழைநீர் ஆதாரத்தை பெருக்க ரூ.98.44லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார்

திண்டுக்கல், : திண்டுக்கல் நகரில் மழைநீர் வடிகால் கட்டுதல் மற்றும் குளங்களில் நீர் ஆதாரத்தை பெருக்க ரூ.98.44 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. நகரின் மொத்த பரப்பளவு 14.01 கி.மீ. ஆகும். கடந்த 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2 லட்சத்து 7 ஆயித்து 225 பேர் வசித்து வருகின்றனர். கோபாலசமுத்திரகுளம், பி.குளம், மருதாணிகுளம், ராஜாகுளம், சுண்ணாம்பு குளம் என 9 குளங்கள் உள்ளன. செடி, கொடி வளர்ந்து புதர் மண்டி காணப்பட்டதால் குளங்களில் தண்ணீர் தேங்காமல் வெளியேறி சென்றது.

நகரில் போதிய மழையில்லாத காரணத்தால் நிலத்தடிநீர் வறண்டு விட்டது. ஆத்தூர் காமராஜர் அணை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் நகரின் மக்களின் குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளை முற்றிலுமாக போக்க முடியாமல் உள்ளது.

தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய பொதுமக்களின் பங்களிப்புடன் நகராட்சி நிர்வாகம் பல லட்சம் ரூபாய் செலவில் பயன்பாடின்றி இருந்த கோபாலசமுத்திர குளத்தை சுத்தம் செய்து தூர் வாரி மழைநீர் சேகரிப்பு குளமாக மாற்றியது. அதேபோல் திண்டுக்கல்-சிலுவத்தூர் ரோட்டில் உள்ள பி.குளத்தையும் சுத்தம் செய்து மழைநீர் சேகரிப்பு குளமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்து 9 குளங்களிலும் நீர் ஆதாரத்தை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி 39.90 கி.மீ. தூரத்தில் பிரதான கால்வாய், 16.30 கி.மீ. தூரத்திற்கு துணை கால்வாய், தெருக்களில் 310.30 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் என மொத்தம் 340.30 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக கால்வாய் அமைக்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக ரூ.21.60 லட்சத்தில் பிரதான கால்வாய், ரூ.9.02 லட்சத்தில் துணை கால்வாய் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் தெருக்களில் ரூ.37.60 லட்சம் மதிப்பில் இரண்டாம் கட்டமாக கால்வாய் அமைக்கப்பட உள்ளது. மேற்பார்வை, பராமரிப்பு, கருவிகள் மற்றும் இதர செலவினங்கள் 30.22 லட்சம் என மொத்தம் 98.44 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளை மேற்கொள்வது தொடர்பாக நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் நகராட்சி அலுவலக வளாகத்தில் தலைவர் மருதராஜ் தலைமையில் நேற்று நடந்தது. மழைநீர் சேகரிப்புக்கான திட்டம் குறித்த செயல்விளக்க படம் ஒளி பரப்பப்பட்டது.

கூட்டத்தில் ஆணையர் குமார், பொறியாளர் கணேசன், நகர்நல அமைப்பு அலுவலர் பழனியப்பன், கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து நகராட்சி தலைவர் மருதராஜ் கூறுகையில், ரூ.98.44 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இது அரசு ஒப்புதலுக்கு அனுப்பி அனுமதி பெற்ற பின் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்படும் என்றார்.