Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மானாமதுரையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தீவிர நடவடிக்கை: தலைவர் தகவல்

Print PDF

தினமணி             03.02.2014

மானாமதுரையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தீவிர நடவடிக்கை: தலைவர் தகவல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சியில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கூடுதல் இடங்களில் போர்வெல் கிணறுகள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கப்படும் என பேரூராட்சி மன்றத் தலைவர் ஐ.ஜோசப்ராஜன் தெரிவித்தார்.

மானாமதுரை பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவர் ஜோசப்ராஜன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் காளீஸ்வரி தெய்வேந்திரன், செயல் அலுவலர் அமானுல்லா, சுகாதார ஆய்வாளர் அபுபக்கர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை சுகாதார மேற்பார்வையாளர் பாலு வாசித்தார்.

கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதியிலுள்ள அடிப்படை  பிரச்னைகள் குறித்து பேசினர்.

கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு தலைவர் பதிலளித்துப் பேசியதாவது:

ராஜகம்பீரம் வைகையாற்றுக்குள் செயல்படும் மானாமதுரை நகர் குடிநீர் திட்டத்துக்கான போர்வெல் கிணறுகளில் வறட்சி காரணமாக நீர் ஆதாரம் குறைந்து வருவதால், தற்போது நகரில் ஒருநாள் விட்டு ஒருநாள் தான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

இனி வரக்கூடிய கோடைகாலத்தில் நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகும் என கருதுவதால், முன்னெச்சரிக்கையாக தற்போதுள்ள போர்வெல்

கிணறுகளுடன் மேலும் கிணறுகள் அமைத்து அதிலிருந்து குடிநீர் சப்ளை செய்யும் திட்டம் உள்ளது.

மேலும் நகரில் பல்வேறு இடங்களிலும் சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 மானாமதுரை நகர் குடிநீர் திட்டம் செயல்படும் ராஜகம்பீரம் வைகையாற்று பகுதியில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும், பேரூராட்சி கவுன்சிலர்கள் மன்றக் கூட்ட பார்வைக்கு கொண்டு வந்த நகர் வளர்ச்சித் திட்டத்துக்கான பணிகளை எடுத்துச் செய்ய அனுமதி கோருதல், பேரூராட்சியின் செலவினங்களை அங்கீகரித்தல், திட்டப் பணிகளை எடுத்துச் செய்ய குறைந்த ஒப்பந்தப்புள்ளி கொடுத்த ஒப்பந்தங்களை அனுமதித்தல் என 17 தீர்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.