Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரையில் 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க முடிவு

Print PDF

தினமணி             01.02.2014

மதுரையில் 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க முடிவு

வைகையில் குடிநீர் இருப்பு மிகக் குறைவாக இருப்பதால், இரண்டு வைகைத் திட்டங்களின் மூலம் 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க முடிவு செய்துள்ளதாகவும், இது ஓரிரு நாளில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளதாகவும், மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

வைகையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 35.56 அடி தண்ணீர்தான் உள்ளது. அதாவது, 640 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கியுள்ளது. இதில், மதுரை மாநகராட்சிக்கான ஒதுக்கீட்டுப்படி, 2 வைகை குடிநீர்த் திட்டங்களின் மூலம் தண்ணீர் எடுத்தால் குறைந்த நாள்களுக்குத் தான் விநியோகிக்க முடியும்.

இதைத் தவிர்க்க, தற்போதுள்ள தண்ணீரை 4 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்தால், முந்தைய 72 வார்டுகளுக்கு மட்டும் 90 நாள்களுக்கு குடிநீர் வழங்க முடியும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்தெந்தப் பகுதியில் எந்தெந்த தேதியில் குடிநீர் விநியோகம் செய்யலாம் என்பது குறித்த சுழற்சி முறையிலான விநியோகப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பட்டியல் இன்னும் ஓரிரு நாளில் இறுதியானவுடன், 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் குறித்து முறைப்படி அறிவிப்பு செய்து நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும், மாநகரில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், முன்னேற்பாடுகளும் செய்து வருகிறோம். நான்கு மண்டலங்களிலும் புதிதாக தலா 125 ஆழ்துளை குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் நல்ல தண்ணீர் இருப்பு இருப்பதால், பிரச்னை ஏற்படவில்லை. இருந்தபோதிலும், அப்பகுதிகளுக்கு வைகை குடிநீர் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விநியோகம் தொடரும்.

மேலும், மாநகராட்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல தண்ணீர் வளம் உள்ள 55 கிணறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றிலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு, மாநகரில் விநியோகம் செய்யப்படவுள்ளது.

பெரியாரிலிருந்து மாநகர தேவைக்காக தண்ணீர் திறக்க அரசுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால், அந்த அணையிலிருந்து தற்போதைய சூழலில் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.  மாநகரில் குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், 3ஆவது வைகை குடிநீர்த் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே வைகையில் மதுரை மாநகருக்கு ஒதுக்கீடு செய்துள்ள 1,500 மில்லியன் கனஅடியுடன், மேலும் 600 மில்லியன் கனஅடி தண்ணீர் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 3ஆவது திட்டத்துக்கான ஆய்வுப் பணியில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.  பேட்டியின்போது, ஆணையர் கிரண்குராலா, நகரப் பொறியாளர் மதுரம் ஆகியோர் உடனிருந்தனர்.