Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிப்ரவரி 2 முதல் குப்பை அள்ளும் பணி தனியார் வசம்

Print PDF

தினமணி                30.01.2014  

பிப்ரவரி 2 முதல் குப்பை அள்ளும் பணி தனியார் வசம்

திருப்பூர் மாநகரில் 30 வார்டுகளில் குப்பை சேகரிக்கும் பணியை வரும் பிப்ரவரி 2-ஆம் தேதிமுதல் தனியார் வசம் ஒப்படைக்கப்பட இருக்கும் நிலையில், அதுகுறித்த ஆய்வுக் கூட்டம் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

 திருப்பூர் மாநகரில் தினமும் 500 டன்னுக்கும் கூடுதலான குப்பை வீதிகளில் கொட்டப்படுகிறது. இக் குப்பையை அகற்றும் பணி மாநகராட்சி நிர்வாகத்திற்கு சவாலாக இருந்து வருகிறது. இந் நிலையில், மொத்தமுள்ள 60 வார்டுகளில் 2 மற்றும் 3-ஆவது மண்டலங்களில் உள்ள தலா 15 வார்டுகளிலும் குப்பை சேகரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

  இந் நிலையில், வரும் பிப்ரவரி 2-ஆம் தேதியில் இருந்து இந்த 30 வார்டுகளிலும் குப்பை சேகரிக்கும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இது தொடர்பாக, அந்த தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியும் ஆய்வுக் கூட்டம் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. துணை மேயர் சு.குணசேகரன், மண்டலத் தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜான், கிருத்திகா சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 இதில், வீதிகளில் குப்பையை அள்ளுவது தொடர்பாக அந்த தனியார் நிறுவனம் செயல்படும் விதம் குறித்து அந் நிறுவனப் பிரதிநிதிகள் விளக்கினர். வீடுகள்தோறும் குப்பை சேகரிப்பதைக் கண்டறிவது குறித்து மேயர் அ.விசாலாட்சி கேட்டறிந்தார்.

  குப்பை அள்ளும் வாகனங்களில் ஜி.பி.ஆர். கருவி பொருத்தப்பட்டு, ஆன்லைன் மூலமாக வீதிகளில் குப்பை நிரம்பியுள்ள கண்டெய்னர் கண்டறியப்படும் என்பது உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து தனியார் நிறுவனப் பிரதிநிதிகள் விளக்கம் அளித்தனர்.

 இதுகுறித்து, மேயர் அ.விசாலாட்சி கூறியது:  குப்பை சேகரிக்கும் பணி தனியார் வசம் வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் ஒப்படைக்கப்படும். இதுதொடர்பாக அந்த தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது. வியாழக்கிழமை (ஜனவரி 30), மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்களுக்கு இது தொடர்பான விளக்கக் காட்சிகளுடன் தனியார் நிறுவனம் விளக்கம் அளிக்க உள்ளது என்றார்.