Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரி நிலுவையை வசூலிக்க புதிய முயற்சி

Print PDF

தினமணி          26.01.2014 

வரி நிலுவையை வசூலிக்க புதிய முயற்சி

கடலூர் நகரில் வரி நிலுவையை வசூலிக்க புதிய முயற்சி தொடங்கப்படவுள்ளது. இதன்படி அதிக வரி நிலுவை உள்ளவர்களை நேரில் அழைத்துப் பேச முடிவு செய்துள்ளதாக நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

 கடலூர் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் சொத்து வரி நிலுவை ரூ.7.5 கோடி. இந்த தொகையை வசூலிப்பது தொடர்பாக நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியன் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

 இக் கூட்டத்தில் பொறியாளர் ரவி, நகர்நல அதிகாரி குமரகுரு, நகரமைப்பு அதிகாரி முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியன் பேசியதாவது: சொத்து, குடிநீர் வரி நிலுவையை விரைவாக வசூலிக்க வேண்டும் என்றும் நகராட்சி அனுமதி பெறாமல் முறைகேடாக போடப்பட்ட குடிநீர் இணைப்புகளை துண்டிக்க குழு அமைக்கப்படும்.

 தற்போது சொத்து வரி பாக்கி ரூ.5.39 கோடி, குடிநீர் கட்டணப் பாக்கி ரூ.2.17 கோடியாக உள்ளது. வசதி படைத்தவர்கள்தான் அதிக பாக்கி வைத்துள்ளனர்.

எனவே அவர்கள் சொத்து வரி பாக்கியை விரைவில் செலுத்தினால் துப்புரவுப் பணி உள்ளிட்டவைகளை இன்னும் சிறப்பாக செய்ய முடியும். இதற்காக ஒவ்வொரு வார்டிலும் அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்களில் 5 முதல் 10 பேரை அழைத்துப் பேச இருக்கிறேன்.

 கடந்த 15 ஆண்டுகளில் ஏராளமானவர்கள் நகராட்சியின் அனுமதியின்றி முறைகேடாக குடிநீர் இணைப்புகளை எடுத்துள்ளனர். இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 எனவே அத்தகைய குடிநீர் இணைப்புகளை  துண்டிக்க பொறியாளர் தலைமையில் ஒரு குழுவை நியமிக்க உள்ளோம். அந்த குழுவினர் வார்டு, வாரியாகச் சென்று முறையற்ற குடிநீர் இணைப்புகளைக் கண்டு பிடித்து துண்டிப்பார்கள் என சி.கே.சுப்பிரமணியன் கூறினார்.