Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பூண்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர ரூ.94 கோடி செலவில் புதிய கால்வாய்: ஜெயலலிதா ஒப்புதல்

Print PDF

 மாலை மலர்            25.01.2014

பூண்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர ரூ.94 கோடி செலவில் புதிய கால்வாய்: ஜெயலலிதா ஒப்புதல்

சென்னை, ஜன. 25 - தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆரணி நகராட்சியில் 36 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பெரியகுளம் நகராட்சியில் 15 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருவத்திபுரம் நகராட்சியில் 13 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திண்டிவனம் நகராட்சியில் 52 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 117 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 நகராட்சிகளில் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகளை சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ்செயல்படுத்திட முதல்- அமைச்சர் ஜெயலலிதா அனுமதி அளித்து உத்தரவிட் டுள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்காக ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் கடன் உதவி திட்டத்தின் கீழ் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டத்தினை செயல்படுத்தவும், வருடத்திற்கு 11 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அதன் பராமரிப்பை மேற்கொள்ளவும் நிர்வாக ஒப்புதல் வழங்கி முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப குடிநீரின் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பல்வேறு குடிநீர் வழங்கும் திட்டங்களை முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகி றது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி வட்டம் கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளான கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகையை இணைத்து 330 கோடி ரூபாய் செலவில் ஒரு நீர்த்தேக்கம் அமைக்க நிர்வாக ஒப்புதல் அளித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். இந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீரை இருமுறை நிரப்புவதன் மூலம் ஓராயிரம் மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க இயலும்.

பூண்டி ஏரியிலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு செல்ல கால்வாய் வசதிகள் இருப்பதாலும் மற்றும் இவ்விரண்டு ஏரிகளிலிருந்து கீழ்ப்பாக்கம் மற்றும் செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு வசதிகள் இருப்பதாலும், தேர்வாய்கண்டிகை ஏரியிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, தேர்வாய்கண்டிகை ஏரியிலிருந்து பூண்டி ஏரிக்கு கண்டலேறு பூண்டிக் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை 93 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் செயல்படுத்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா நிர்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தினால் செயல் படுத்தப்படும்.

சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள் மாசுபடுவதைத் தவிர்க்கும் பொருட்டு அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் படிப்படியாக பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமை யிலான அரசு முடிவெடுத்துள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெரியகுளம் நகராட்சியில் 26 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சாத்தூர் நகராட்சியில் 37 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மேட்டூர் நகராட்சியில் 73 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், அரக்கோணம் நகராட்சியில் 95 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருப்பத்தூர் நகராட்சியில் 104 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சிதம்பரம் நகராட்சியில் 75 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 412 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மேற்கூறிய 6 நகராட்சிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த முதல்-அமைச்சர் ஜெய லலிதா உத்தரவிட்டுள்ளார்.

குடிநீர் அபிவிருத்தி திட்டங்களுக்காக 441 கோடியே 46 லட்சம் ரூபாய், பாதாளச் சாக்கடைத் திட்டங் களுக்காக 412 கோடியே 50 லட்சம் ரூபாய் என மொத்தம் 853 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டங்களை செயல்படுத்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.