Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்பூரில் 6 ஆயிரம் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி: மேயர்

Print PDF

தினமணி             23.01.2014

திருப்பூரில் 6 ஆயிரம் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி: மேயர்

மாநகராட்சிப் பகுதிகளில் 6 ஆயிரம் நாய்களுக்கு ரேபீஸ் எனப்படும் வெறிநாய் தடுப்பூசி போடப்படும் பணி, மாநகராட்சியுடன் இணைந்து உலகளாவிய கால்நடை சேவை மையத்தின் மிஷன் ரேபீஸ் இயக்கம், திருப்பூர் தங்கம் நினைவு அறக்கட்டளை மூலமாக வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்று மேயர் அ.விசாலாட்சி கூறினார்.

திருப்பூர் பெரிச்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், ரேபீஸ் வெறிநாய் நோய் ஒழிப்பு இயக்கம், மாநகராட்சி, மிஷன் ரேபீஸ், விலங்குகள் தொண்டு நிறுவனமான திருப்பூர் தங்கம் நினைவு அறக்கட்டளை சார்பில் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடும் முகாம் துவக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமை தொடங்கி வைத்து மேயர் அ.விசாலாட்சி பேசியது: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியை மாநகராட்சி ஏற்கனவே செய்து வருகிறது. வெறிநாய் கடித்தால், அதனால் பாதிக்கப்பட்ட நபரின் செயல்பாடும் அந் நாயை போல உள்ளது. நாய்களுக்கு ரேபீஸ் வெறிநாய் தடுப்பூசி போடுவதன் மூலமாக, மனிதர்களுக்கு அந் நோய் பரவாமல் தடுக்க முடியும்.

இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 6 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மேற்கண்ட அமைப்புகள் மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொள்கிறது என்றார்.

துணை மேயர் சு.குணசேகரன் பேசியது:

திருப்பூர் சுலோச்சனா காட்டன் நிறுவனத்தின் தங்கம் நினைவு அறக்கட்டளை, மிஷன் ரேபீஸ் இயக்கம் மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொண்டிருக்கும் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசிபோடும் பணிகளுக்கு மாநகராட்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார்.

உலகளாவிய கால்நடைகள் சேவை மையத்தின் மிஷன் ரேபீஸ் இயக்கத்தின் தென்னிந்திய மண்டல மேலாளர் டாக்டர் முருகன் அப்புப்பிள்ளை பேசியது: நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசிபோட்டு வெறிநாய் கிருமிகளை அழித்துவிட்டால்,

மனிதர்களுக்கு இந்நோய் வர வாய்ப்பில்லை. அதன்படி மிஷன் ரேபீஸ் இயக்கம் மூலமாக இந்தியாவில் இப்பணியை தொடங்கி, இதுவரை  60 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசிகள் போட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் மதுரை, ஈரோடு நகரங்களில்  14,000 நாய்களுக்கு இத் தடுப்பூசிகள் போட்டப்பட்டுள்ளன.

தற்போது திருப்பூர் மாநகரில் உள்ள 60 வார்டுகளிலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு வரும் 31-ஆம் தேதிக்குள் இலவசமாக ரேபீஸ் தடுப்பூசிகளும், 500 நாய்களுக்கு கருத்தடையும் செய்யப்படும் என்றார்.  நாய்களுக்கான பிரத்யேக கருத்தடை வாகனத்தை மேயர் அ. விசாலாட்சி ஒப்படைத்து, இது தொடர்பான மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியையும் அவர் துவக்கிவைத்தார்.

இதில், மாநகராட்சி ஆணையர் கே.ஆர்.செல்வராஜ், தங்கம் நினைவு அறக்கட்டளை(சுலோச்சனா காட்டன் மில்ஸ்) தலைவர் ஆஷா கிருஷ்ணகுமார், மாநகர நல அலுவலர் டாக்டர் ஆர்.செல்வகுமார், மண்டலத் தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், மாநகராட்சி சுகாதாரக்குழுத் தலைவர் பூலுவப்பட்டி பாலு, கவுன்சிலர்கள் சண்முகசுந்தரம், எஸ்.ஆர்.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.