Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வைகையில் குப்பைகள் அகற்றும் பணி: சமூக ஆர்வலர்கள் பங்கேற்க அழைப்பு

Print PDF

தினமணி            20.01.2014

வைகையில் குப்பைகள் அகற்றும் பணி: சமூக ஆர்வலர்கள் பங்கேற்க அழைப்பு

 மதுரை மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட வைகை ஆற்றுப் பகுதியில், ஜனவரி 20 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 2 நாள்களுக்கு குப்பைகள் அகற்றும் பணி நடைபெறவுள்ளது.

 இப்பணியில், சமூக ஆர்வலர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், மாணவ, மாணவியர் மற்றும் சமூக அமைப்புகள் பங்கேற்கலாம் என, மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா அழைப்பு விடுத்துள்ளார்.

 இது தொடர்பாக, அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் கூறியிருப்பது:

 மதுரை மாநகராட்சிக்குள்பட்ட வைகை ஆற்றில் தொடர்ந்து கழிவுநீரை வெளியேற்றுவதும், குப்பைகளைக் கொட்டுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இதனால், வைகை ஆறு மாசுபடும் சூழல் உருவாகியுள்ளது. இதைத் தடுப்பதற்காக, மாநகராட்சி நிரந்தரத் திட்டத்தை வகுத்து, முனைப்புடன் செயலாற்ற உள்ளது.

 இது தொடர்பாக, விரைவில் பல்வேறு துறை அலுவலர்கள், பொறியாளர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வுகாண சமூக ஆர்வலர்கள், பொதுமக்களின் கருத்துகளை அறிய, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

 எனவே, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாநகராட்சிக்குள்பட்ட வைகை கரையோரமான விளாங்குடி முதல் தெப்பக்குளம் பாலம் வரை குப்பைகளை அகற்றும் பணிகளை, அழகிய மதுரை மாநகர் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களைக் கொண்டு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

 இதன்படி, திங்கள்கிழமை முதல் 2 நாள்களுக்கு வைகையில் குப்பைகள் அகற்றும் பணி நடைபெறும், இதில் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.