Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வடவள்ளியில் பூங்கா திறப்பு

Print PDF

தினமணி               08.01.2014

வடவள்ளியில் பூங்கா திறப்பு

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட வடவள்ளியில் ஸ்ரீ தக்சா பிராப்பர்டி டெவலப்மெண்ட் நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.30 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட பூங்காவை மேயர் செ.ம.வேலுசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

கோவை மாநகராட்சியின் 17-ஆவது வார்டுக்கு உள்பட்ட நவாவூர் பிரிவு அருகே உள்ளது குருசாமி நகர். இங்குள்ள 1 ஏக்கர் ரிசர்வ் சைட்டில் புதிய பூங்கா உருவாக்க ஸ்ரீ தக்சா பிராப்பர்டி டெவலப்மெண்ட் நிறுவனம், மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, மாநகராட்சியின் அனுமதியுடன் ரூ.30 லட்சம் செலவில் சுற்றுச்சுவர், கான்கிரீட் நடைபாதை, இருக்கைகள், திறந்த வெளி அரங்கு, புல்வெளிகள், மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள், குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கான விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்பட்டன.

திங்கள்கிழமை நடைபெற்ற இந்த பூங்கா திறப்பு விழாவிற்கு, ஸ்ரீ தக்சா பிராப்பர்டி டெவலப்மெண்ட் நிர்வாக இயக்குநர் ஆர்.மோகன், மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவர் சாவித்ரி பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிறுவனத்தின் பொதுமேலாளர் ராம.வேலாயுதம் அறிமுக உரையாற்றினார். மேயர் செ.ம.வேலுசாமி தலைமை வகித்து பூங்காவைத் திறந்து வைத்து, மரக்கன்றுகள் நட்டார்.

  மாநகராட்சி ஆணையர் ஜி.லதா, சட்டப்பேரவை உறுப்பினர் மலரவன், மண்டல உதவி ஆணையர் டி.சுப்பிரமணியம், துணை மேயர் லீலாவதி உண்ணி, ஸ்ரீ தக்சா நிறுவன இயக்குநர்கள் ஆர்.ராமநாராயணன், அருள் ஆண்டனி மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ தக்சா நிறுவனத் தகவல் தொடர்பு அலுவலர் கணேசன் செய்திருந்தார்.