Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஹைவேவிஸ் மலைச் சாலையை சீரமைக்க ரூ.86 கோடியில் திட்டம்

Print PDF

தினமணி              30.12.2013

ஹைவேவிஸ் மலைச் சாலையை சீரமைக்க ரூ.86 கோடியில் திட்டம்

ஹைவேவிஸ் மலைச்சாலையை சீரமைக்க ரூ.86 கோடியே 60 லட்சத்தில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாக உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    சின்னமனூர் அருகே உள்ள  மேற்கு தொடர்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட 7  மலைகிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு  செல்லும் சாலை மோசமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் அதிர்ஷ்ட வசமாக 22 பயணிகள் உயிர்தப்பினர். இதைத் தொடர்ந்து இங்குள்ள பொதுமக்கள் மற்றும் தோயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த சில நாள்களுக்கு முன் போரட்டத்தில் ஈடுபட்டனர். 3-ஆவது நாளாக போராட்டம் தொடர்ந்த நிலையில் கோட்டாட்சியர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர், தாசில்தார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சாலையை விரைவில் சரிசெய்வதாக உறுதியளித்தனர். இதைதொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

 இதன்படி உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது. மலைச்சாலையை சீரமைக்க ரூ. 86 கோடியே 60 லட்சத்தில்  உத்தேச திட்ட மதிப்பீடு செய்யபட்டுள்ளதாகவும், நிதி வந்தவுடன் 2மாத காலத்துக்குள் தார் சாலை போடப்படும் எனவும், தாற்காலிக நடவடிக்கையாக பெரிய பள்ளங்களில் கற்களைப் போட்டு சரிசெய்யும் பணி 15 நாள்களில் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும்  இப்பணியில் நெடுஞ்சாலைத்துறையினருக்கு ஹைவேவிஸ் பேரூராட்சி நிர்வாகம், தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள்  ஒத்துழைப்புகொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

உத்தமபாளையம் கோட்டாட்சியர் ஜானகி தலைமையில் நடந்த கூட்டத்திற்கு, தாசில்தார் தனலிங்கம், சின்னமனூர் காவல் துறைஆய்வாளர் வினோஜி, உதவி செயற்பொறியாளர் குமணன் (நெடுஞ்சாலை துறை), ஹைவேவிஸ் பேரூராட்சி செயல் அலுவலர் மனோரஞ்சிதம், தேயிலைத் தோட்ட நிர்வாகம் சார்பாக ஏ.ஜி.எம். ரஞ்சித்,எச்.ஆர்.பால்பாண்டியன், சுரேஷ் ஆகியோரும், தொழிற்சங்கம் சார்பாக எச்.எம்.எஸ்.முத்தையா, ஐ.என்.டி.யு.சி.முனீஸ்வரன், ஏ.டி.பி.சஞ்சிவிபாண்டி, எல்.பி.எப்.மனோகரன் மற்றும் பொதுமக்கள் சார்பாக சசிகுமார், மாரியப்பன், அஞ்சப்பன் கலந்துகொண்டனர்.