Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

படமும், பாடமும்! பாடத்திட்டத்துடன் "ஸ்மார்ட் கிளாஸ்' மாநகராட்சி பள்ளியில் அறிமுகம்

Print PDF

தினமலர்              11.12.2013

படமும், பாடமும்! பாடத்திட்டத்துடன் "ஸ்மார்ட் கிளாஸ்' மாநகராட்சி பள்ளியில் அறிமுகம்

 படமும், பாடமும்! பாடத்திட்டத்துடன் "ஸ்மார்ட் கிளாஸ்'  மாநகராட்சி பள்ளியில் அறிமுகம்

கோவை :கோவை மாநகராட்சி பள்ளிகளில், பாடத்திட்டத்தை உள்ளடக்கிய "ஸ்மார்ட் கிளாஸ்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கற்கும் திறனும், கல்வி அறிவும் மேம்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியும், அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷனும் (ஏ.ஐ.எப்.,) இணைந்து, மாநகராட்சி பள்ளிகளில் பல்வேறு கல்வி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. ஆர்.எஸ்.புரத்திலுள்ள மாநகராட்சி காதுகேளாதோர் சிறப்பு பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக, "டேப்லெட் கம்ப்யூட்டர்' வழங்கி, ஆசிரியர்கள் "சைகை' மொழியில் கல்வி போதிப்பதை, கையடக்க "டேப்லெட் கம்ப்யூட்டரில்' வழங்கியுள்ளது.

அதேபோன்று மற்ற வகுப்பு மாணவர்களுக்கும், கல்வி கற்கும் முறையை எளிமைப்படுத்த "ஏ.ஐ.எப்' திட்டமிட்டது. வகுப்பறையில் கரும்பலகையில் எழுதி, கல்வி போதிக்கும் நிலையை மாற்றி, மாணவர்களுக்கு எளிய முறையில் பாடங்களை புரிய வைக்க "ஸ்மார்ட் கிளாஸ்' முறையை அறிமுகம் செய்துள்ளது.

மாநகராட்சி பள்ளிகளில் 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களின் பாடங்களை, ஆசிரியர்கள் செயல்முறை விளக்கங்களுடன் பாடம் நடத்துவதை பதிவு செய்து, தேவையான படங்களை இணையதளத்தில் தேடி பிடித்து, எடிட்டிங் செய்து, கம்ப்யூட்டர்களில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

"ஸ்மார்ட் கிளாஸ்' பாடங்களை மாணவர்களிடம் முன்கூட்டியே ஒப்படைத்து, கற்பிக்கின்றனர். அதன்பின், வழக்கம் போல், ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்தும் போது, பாடத்திட்டத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்று, தெளிவுபடுத்திக் கொள்கின்றனர்.

"ஸ்மார்ட் கிளாஸ்'க்கு பிறகு, மாணவர்கள் குழு விவாதம் செய்கின்றனர். இறுதியாக ஆசிரியர் பாடம் நடத்தும்போது, மிகவும் எளிதாக கல்வி கற்கின்றனர்.

ஏ.ஐ.எப்., மாநில ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் கூறுகையில், ""மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6,7 மற்றும் 8ம் வகுப்பு பாடங்களை "ஸ்மார்ட் கிளாஸ்' முறைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம். தற்போது, அனுப்பர்பாளையம், குப்பக்கோணாம்புதூர், மணியகாரம்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகள், ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் "பைலட்' திட்டமாக "ஸ்மார்ட் கிளாஸ்' துவங்கியுள்ளோம்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியலில் தலா இரண்டு பாடங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. "ஸ்மார்ட் கிளாஸ்' மூலமும், சாதாரண வகுப்புகள் மூலமும் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வித்திறன் சோதிக்கப்படுகிறது. அடுத்த பருவத்தில், மாநகராட்சியில் உள்ள 26 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' துவக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் மாணவர்களின் சுய கற்றல், குழு விவாதம், பாடம் சார்ந்த அறிவு மேம்படும்'' என்றார்.

எளிதானது கற்றல், கற்பித்தல்!

கோவை அனுப்பர்பாளையம் உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் மகேந்திரகுமார் கூறுகையில், ""பாடப்புத்தகத்தை பார்த்து, கரும்பலகையில் எழுதி பாடம் நடத்தும்போது, மாணவர்கள் அதை எழுதி வைத்து படிக்கின்றனர். இந்த முறையில் கம்ப்யூட்டர் மூலம், செயல்முறை விளக்கங்களுடன் பாடம் நடத்தும் போது, மாணவர்களின் கற்கும் திறன் மேம்படுகிறது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எளிதாக உள்ளது'' என்றார்.

  • தமிழ் ஆசிரியர் ஜாய் விமலா கூறுகையில், ""தமிழ் இலக்கணப்பகுதியை எத்தனை முறை கற்றுக்கொடுத்தாலும் மாணவர்கள் சிரமமாக கருதுகின்றனர். "ஸ்மார்ட் கிளாஸ்' மூலம் இலக்கணம் படிக்கும்போது, எளிதாக புரிந்து கொள்கின்றனர். சந்தேகம் ஏற்பட்டால் வீடியோ பார்த்து தெளிவுபடுத்தி கொள்கின்றனர்'' என்றார்.
  • 7ம் வகுப்பு மாணவன் யோகேஸ்வரன் கூறுகையில், ""பள்ளிக்கு விடுப்பு எடுத்தாலும், அடுத்த நாள் வந்து கம்ப்யூட்டர் உதவியுடன் அந்த பாடத்தை கற்றுக்கொள்ளலாம். ஆசிரியர் விடுப்பில் இருந்தாலும், பதிவு செய்து வைத்துள்ள பாடங்களை படித்துக்கொள்ளலாம். இந்த முறையில் கல்வி கற்க ஆர்வமாகவும், எளிதாகவும் உள்ளது'' என்றார். 
Last Updated on Wednesday, 11 December 2013 07:33