Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி சொத்துவரி விதிப்பு கள ஆய்வில் நவீனமயம் தாமதம் தவிர்க்க அலுவலர்களுக்கு "டேப்லெட்'

Print PDF

தினமலர்         18.11.2013 

மாநகராட்சி சொத்துவரி விதிப்பு கள ஆய்வில் நவீனமயம் தாமதம் தவிர்க்க அலுவலர்களுக்கு "டேப்லெட்'

கோவை :கோவை மாநகராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களுக்கு, சொத்து வரி விதிக்க, காலவிரயம் ஏற்படுவதை தவிர்க்க, வரிவசூலர்கள் மற்றும் உதவி வருவாய் அலுவலர்களுக்கு "டேப்லெட்' வழங்கவும், பணிகளை கம்ப்யூட்டர் மயமாக்கி வேகப் படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சொத்து வரி விதிக்க வேண்டிய கட்டடங்களை, அளவீடு செய்யும் வரி வசூலர்கள், அலுவலகத்துக்கு வந்து கம்ப்யூட்டரில் பதிவு செய்கின்றனர். அதன்பின், உதவி வருவாய் அலுவலர் ஆய்வு செய்து, வரி விதிப்பு செய்கிறார். இதனால், காலவிரயமும் ஏற்படுகிறது. இதுபற்றி தொடர்ந்து புகார்கள் வருவதால், வரி விதிப்பு முறையை நவீனப்படுத்தவும், ஆன்-லைனில் பதிவு செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதற்காக, வரி வசூலர்கள் மற்றும் உதவி வருவாய் அலுவலர்களுக்கு கையடக்க (டேப்லெட்) கம்ப்யூட்டர் வழங்க முடிவு செய்யப்பட்டு, மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரி வசூலர்களுக்கு வழங்கும் "டேப்லெட்' மூலம் கட்டடத்தின் நான்கு பக்கத்தில் இருந்தும், கட்டடத்தின் உள்பக்க அளவுகள், தளங்களின் எண்ணிக்கையை போட்டோ எடுக்க வேண்டும். போட்டோக்களையும், கட்டட அளவுகளையும், "டேப்லெட்'ல் ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். உதவி வருவாய் அலுவலர்கள் உடனுக்குடன் பைலை ஆய்வு செய்து, உத்தரவுகளை கம்ப்யூட்டர் வாயிலாக வழங்குவார்.

அந்த ஆவணங்களை கம்ப்யூட்டரில் "டவுன்லோடு' செய்து பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, பிரத்யோக "சாப்ட்வேர்' உருவாக்கப்பட்டு, தனியார் நிறுவனத்தின் உதவியுடன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் வரி வசூலர்களால் புதிய வரிவிதிப்பு செய்யப்பட வேண்டிய கட்டடங்கள், கூடுதலாக கட்டப்பட்டிருக்கும் கட்டடங்கள், உபயோக மாற்றம் செய்யப்பட்டுள்ள கட்டடங்கள் அளவீடு செய்து, கோவை மாநகராட்சி சட்டம் - 1981, பிரிவு 126ன்படி வரிவிதிப்பு செய்யப்படுகிறது.

சொத்து வரி விதிப்பு செய்ய, தற்போதைய நடைமுறையால் கால விரயம் மற்றும் வரி வசூலர்களின் பணிச்சுமை ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், நவீன முறையில் "டேப்லெட்' கம்ப்யூட்டர் கருவியை உபயோகித்து, மிக எளிய முறையில் உடனுக்குடன் கட்டடங்களை படம் எடுத்து, கட்டடத்தின் அளவீடுகளை கள ஆய்வு செய்து, அளவீடு செய்யும் நேரத்திலே, இந்த "டேப்லெட்' கருவியில் பதிவு செய்யப்படும்.

இதற்காக, கோவை மாநகராட்சியில் வரி வசூலர், உதவி வருவாய் அலுவலர்கள் 60 பேருக்கு, ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பில் "டேப்லெட்' வாங்கப்படுகிறது. இந்த திட்டத்தை கையாள வரி வசூலர், உதவி வருவாய் அலுவலர்களுக்கு "சாப்ட்வேர்' பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.