Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியின் "மறுசுழற்சி திட்டம்' பலன் தருமா?

Print PDF

தினமலர்            08.11.2013

மாநகராட்சியின் "மறுசுழற்சி திட்டம்' பலன் தருமா?

கோவை : கோவை மாநகராட்சியில் 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், மாநகராட்சி துவங்கியுள்ள பாலித்தீன் மறுசுழற்சி செய்யும் திட்டம் வெற்றியடைவது கேள்விக்குறியாக உள்ளது.

கோவை மாநகராட்சி எல்லைக்குள் 40 மைக்கரான் தடிமனுக்கு குறைவான பாலித்தீன் பொருட்கள் பயன் படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. "தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநகராட்சி நிர்வாகம் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடுகிறது.

கடைகள், குடோன்களில் கண்துடைப்புக்காக பாலித்தீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஆனால், பாலித்தீன் பயன்பாட்டுக்கு "கடிவாளம்' போடாததால், பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், பார்க்கும் இடமெல்லாம் பாலித்தீன் கழிவு நிறைந்துள்ளது. காற்றில் பறக்கும் பாலித்தீன் கவர்கள் சாக்கடைகளில் அடைப்பையும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

கோவை மாநகரத்தில் தினமும் 850 சேகரமாகும் திடக்கழிவில், 30 டன் அளவுக்கு பாலித்தீன் கழிவு ஏற்படுகிறது. குப்பையில் இருந்து பாலித்தீன் கழிவுகளை தனியாக சேகரித்து அழிக்க முடியாததால், பாலித்தீன் கழிவுகளை தனியாக சேகரித்து மறுசுழற்சி செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

"சூன்யா' திட்டத்தில், ஆர்.எஸ்.புரத்தில் 23வது வார்டில் வீடுவீடாக பாலித்தீன் குப்பை தனியாக சேரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. துப்புரவு தொழிலாளர்களுக்கு தினமும் கணிசமான வருவாய் கிடைக்கிறது. வடக்கு மண்டலத்தில் 20 வார்டுகளில் பாலித்தீன் கழிவுகளை தனியாக சேகரித்து, அப்பநாயக்கன் பாளையத்தில் துவங்கப்பட்டுள்ள மறுசுழற்சி மையத்தில், பிளாஸ்டிக் கட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இதன்மூலம் துப்புரவு தொழிலாளர்களுக்கும், மகளிர் குழுவுக்கும் வருவாய் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வெற்றியடையும் போது, ஐந்து மண்டலத்திலும், வெள்ளலூர் குப்பைக் கிடங்கிலும், பாலித்தீன் மறுசுழற்சி மையம் துவங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தடைவிதித்தும் கட்டுப்படுத்த முடியாத சக்தியாக பாலித்தீன் பரவிக்கிடக்கிறது.

வீடுகளில் பாலித்தீன் கவர்களை தனியாக சேகரிப்பதுடன், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தினமும் சேகரமாகும் பாலித்தீனை மறுசுழற்சி செய்து விற்பனை செய்ய வேண்டும். இதன் மூலம் துப்புரவு தொழிலாளர்களுக்கு வருவாய் கிடைத்தாலும், போதிய விழிப்புணர்வு இல்லாததால், பாலித்தீன் மறுசுழற்சி திட்டம் வெற்றி அடைவது கேள்விக்குறியாக உள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 மற்றும் பாலித்தீன் கழிவுகள் மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகள் - 2011ன்படி 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவாக உள்ள பாலித்தீன் பொருட்கள் தயாரிப்பு, விற்பனை மற்றும் உபயோகப்படுத்துதலுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதையும் மீறி பாலித்தீன் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால், நகர் முழுவதும் பரவி கிடைக்கிறது. பாலித்தீன் கவர்களை தனியாக சேகரித்து கொடுப்பதன் மூலம், துப்புரவு தொழிலாளர்களுக்கும், மகளிர் குழுவுக்கும் வருவாய் கிடைத்தால், பாலித்தீன் மறுசுழற்சி திட்டம் வெற்றியடையும்' என்றனர்.