Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கிழக்கு மண்டல அலுவலகத்தில் தினசரி 40 யூனிட் சூரிய மின்உற்பத்தி

Print PDF

தினத்தந்தி            07.11.2013

கிழக்கு மண்டல அலுவலகத்தில் தினசரி 40 யூனிட் சூரிய மின்உற்பத்தி

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் சூரிய மின் உற்பத்தி திட்டத்தை மேயர் செ.ம.வேலுச்சாமி தொடங்கி வைத்தார்.

மின் உற்பத்தி திட்டம்

கோவை மாநகராட்சி¢ கிழக்கு மண்டல அலுவலகத்தில் ரூ.9.70 லட்சம் மதிப்பில் 7.5 கிலோ வாட்ஸ் சூரிய (சோலார்) மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கான கலன்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதை மேயர் செ.ம.வேலுச்சாமி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தை மின்மிகை மாநிலமாக உருவாக்குவதற்கு பல்வேறு மின் உற்பத்தி திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். அவரது முந்தைய ஆட்சி காலத்தில் தான் அதிக அளவு மின் உற்பத்திக்கான காற்றாலைகள் நிறுவப்பட்டன. அதே போல் தற்போது மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பதற்காக சூரிய மின் சக்தி திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

சோலார் நகரம்

கோவை மாநகராட்சி சோலார் நகரமாக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ள 40 நகரங்களில் தமிழகத்தில் முதன்மை நகரமாக உள்ளது. இதனால் இந்த மாநகராட்சியில் நிறுவப்படும் சோலார் மின் திட்டங்களுக்கு அதிக அளவு மானியம் பெறப்படுகிறது. சோலார் நகரமாக உயர்த்துவதன் முதல் கட்டமாக மாநகராட்சி அனைத்து அலுவலகங்களிலும் சோலார் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தனியார் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சோலார் மின் சக்தி திட்டங்கள் அமைத்திட பணிகள் மேற்கொள்ளப்படும்.

40 சதவீதம் சேமிப்பு

தற்போது மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள 7.5 கிலோ வாட்ஸ் சோலார் மின் உற்பத்தி முலம் நாள் ஓன்றுக்கு 40 யூனிட் மின்சாரம் கிடைக்கும். இதனால் இம்மண்டல அலுவலகத்திற்கான மின் தேவையில் 40 சதவீதம் சேமிக்கப்படுவதுடன் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம் சேமிக்கப்படுகிறது. மேலும் 7 ஆண்டுகளில் சோலார் மின் திட்டத்திற்கு செலவிடப்பட்ட முதலீட்டு தொகையும் கிடைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

யார்-யார்?

நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் க.லதா, துணை மேயர் சு.லீலாவதி உண்ணி, துணை கமிஷனர் சு.சிவராசு. மண்டலத்தலைவர்கள் கே.ஆர்.ஜெயராம், ராஜ்குமார், பெருமாள்சாமி, நிலைக்குழுத்தலைவர்கள் தாமரை செல்வி, செந்தில் குமார், நியமனக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நகர பொறியாளர் சுகுமார், நிர்வாக பொறியாளர் லட்சுமணன், உதவி கமிஷனர் பிரபாகரன், கவுன்சிலர்கள் மாரப்பன், சால்ட் வெள்ளிங்கிரி, பால்ராஜ், முத்துசாமி, செல்வக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.