Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாம்பரம் பேருந்து நிலையம் திறப்பு

Print PDF

தினமலர்            07.11.2013

தாம்பரம் பேருந்து நிலையம் திறப்பு

தாம்பரம் : ஐந்து கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, தாம்பரம் பேருந்து நிலையத்தை, காணொலி மூலம், முதல்வர் இன்று திறந்து வைக்கிறார். அதேநேரம், கிழக்கு தாம்பரத்தில், விரைவில் பேருந்து நிலையம் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரியுள்ளனர். தாம்பரத்தில் இதுவரை நிரந்தர பேருந்து நிலையம் என்பது இல்லை. அதனால், ஜி.எஸ்.டி., சாலையில், காந்தி சாலை சந்திப்பு முதல் முடிச்சூர் சாலை சந்திப்பு வரை, பல்வேறு போக்குவரத்து கழகங்களின் பேருந்து நிலையங்கள் இயங்கி வருகின்றன.3.78 ஏக்கர் பரப்பளவில்... ரயில் நிலைய நுழைவாயில் எதிரே உள்ள அண்ணா பேருந்து நிலையத்தில், சில பேருந்துகளை நிறுத்துவதற்கு மட்டுமே இடவசதி உள்ளது. மற்ற பேருந்துகள் சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன.இதனால், 10 ஆண்டுகளுக்கு முன், சானடோரியத்தில் தொழுநோய் மருத்துவமனையை ஒட்டி, சுகாதாரத் துறைக்கு சொந்தமான 3.78 ஏக்கர் நிலத்தில் பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

ஆனால், அந்த இடம் போதுமானதாக இருக்காது என்பதால், அப்போது அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, மேற்கு தாம்பரத்தில், ராணுவத்திடம் இருந்த 13 ஏக்கர் இடம் ஒன்று தேர்வு செய்யப்பட்டது. பின்பு, அந்த இடத்தில் நடந்த ஆய்வில், அது தமிழக அரசுக்கு சொந்தமான இடம் தான் என, தெரியவந்தது. இதையடுத்து, அந்த இடத்தை ஒப்படைக்குமாறு, ராணுவத்திடம், தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், 2ம் உலக போருக்கு முன்பிருந்தே, அந்த இடம் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனால், ஒப்படைக்க முடியாது எனவும் ராணுவம் பதிலளித்தது.

இதையடுத்து, ஏற்கனவே சானடோரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 3.78 ஏக்கர் நிலத்திலேயே பஸ் நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. 19 நடைமேடைகள் தொடர்ந்து, 5 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையம் கட்டும் பணி, கடந்த, 2011ம் ஆண்டு துவங்கியது. இடையில், அருகேயுள்ள தொழுநோய் மருத்துவ மனையை இடிக்க வேண்டும் என்று, எழுந்த பிரச்னை உள்ளிட்ட சில காரணங்களால், பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

அதன்பின், பணிகள் மீண்டும் துவங்கி முடிந்தன. தற்போது தாம்பரத்தில் கட்டப்பட்டு உள்ள புதிய பேருந்து நிலையத்தில், சுற்றுச்சுவர், பேருந்துகள் நிற்பதற்கான, 19 நடைமேடைகள், 30 கடைகள், நேரக் காப்பாளர் அறை, பொது கழிப்பிடம், பயணிகள் ஓய்வறை, ஓட்டல் ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.கிழக்கு தாம்பரத்தில்?இதுவரை, அண்ணா பேருந்து நிலையத்தில் நின்று சென்ற, 80 வழித்தட பேருந்துகள் அனைத்தும், புதிய பேருந்து நிலையத்தில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மற்ற பேருந்துகளும் இங்கு வந்து செல்லும்.கிழக்கு தாம்பரத்தில் இருந்து, வேளச்சேரி சாலை வழியாக, பிராட்வே, அடையாறு, திருவான்மியூர், மடிப்பாக்கம், மேடவாக்கம், வேளச்சேரி, சோழிங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அங்கு பேருந்து நிலையம் இல்லாததால், பேருந்துகள் அனைத்தும், வேளச்சேரி சாலையிலேயே வரிசையாக நிறுத்தப்படுகின்றன.இதனால், நெரிசல் நேரங்களில் கடும் சிக்கல் ஏற்படுகிறது. வேளச்சேரி சாலையை ஒட்டியுள்ள ரயில்வே லைனில் பல ஏக்கர் நிலம் பயன்பாடின்றி உள்ளது.அதில், சில ஏக்கர் நிலத்தை ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து பெற்று, பேருந்து நிலையம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.