Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீட்டுவசதி வாரியம் ரூ.1 கோடி வட்டி தள்ளுபடி! ஈரோட்டில் மூன்றாயிரம் பேர் பயன்

Print PDF

தினமலர்              21.08.2013

வீட்டுவசதி வாரியம் ரூ.1 கோடி வட்டி தள்ளுபடி! ஈரோட்டில் மூன்றாயிரம் பேர் பயன்

ஈரோடு: ஈரோட்டில், அரசு வழங்கிய வட்டி சலுகையால், வீட்டுவசதி வாரியத்தில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வட்டி தள்ளுபடியால், மூன்றாயிரம் ஒதுக்கீட்டாளர்கள் பயனடைந்துள்ளனர். இச்சலுகை, நவம்பர், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் சொந்தமாக வீடு வாங்க வசதியாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வருமானத்துக்கு ஏற்ற வகையில், தனித்தனியாகவும், அடுக்குமாடி குடியிருப்பாகவும், காலிமனையாகவும் விற்பனை செய்து வருகிறது. கிரயபத்திரத்துக்கான செலவோடு, வட்டியை கணக்கிடும் போது, வீட்டின் விலையை விட, வட்டி அதிகமாக விதிக்கப்பட்டது. எனவே, வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டுமென, பயனாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, வட்டி தள்ளுபடி சலுகை வழங்கி அரசு ஆணை வெளியிட்டது. இச்சலுகையின் மூலம், தமிழகத்தில் வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள், 2013, மார்ச், 27ம் தேதி வரை, நிலுவை தொகையினை செலுத்தி வட்டி சலுகை பெற்று, 6,730 பேர் பயனடைந்துள்ளனர். நவம்பர், 30ம் தேதி வரை வட்டி சலுகை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சம்பத்நகர், பெரியார் நகர், மாணிக்கம்பாளையம், கொல்லம்பாளையம், முத்தம்பாளையம், பள்ளிபாளையம், தாராபுரம், பெருந்துறை, நசியனூர் போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்ட வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள், 3,000 பேர் பயன் அடைந்துள்ளனர். இதன் மூலம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வட்டி சலுகையாக ஒதுக்கீட்டாளர்கள் பெற்றுள்ளனர்.

ஈரோடு வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளரும், நிர்வாக அலுவலருமான மணி கூறியதாவது:

தற்போது, 215 அரசாணைப்படி, நவம்பர், 30ம் தேதி வரை வட்டி சலுகை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. அரசு வழங்கிய இச்சலுகையால், பல ஆயிரம் ஒதுக்கீட்டாளர்கள் பயன்பெற்றுள்ளனர். அரசு வழங்கிய சலுகையினை, ஈரோடு வீட்டுவசதி பிரிவில், ஒதுக்கீடு பெற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஈரோடு வீட்டுவசதி பிரிவு அலுவலகத்திலோ, சம்பந்தப்பட்ட அலுவலரையோ நேரில் சந்தித்து சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம், என்றார்.

ஈரோடு வீட்டுவசதி பிரிவின் பல்வேறு திட்டங்களின் கீழ், வீடு பெற்றவர்களுக்கு, கிரயபத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. வாரியத்துக்கு தேவையான பணத்தை முழுமையாக செலுத்தினாலும், கிரயப்பத்திரம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், பயனாளிகள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, இக்குறையை நிவர்த்தி செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டுமென, பொதுமக்கள் தெரிவித்தனர்.