Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தாய்ப்பால் கொடுக்கிறது மாநகராட்சி ஆணையாளர் பேச்சு

Print PDF

தினத்தந்தி              02.08.2013

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தாய்ப்பால் கொடுக்கிறது மாநகராட்சி ஆணையாளர் பேச்சு

 

 

 

 

 

 

தாய்பால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது என்று தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் நடந்த விழாவில் மாநகராட்சி ஆணையாளர் மதுமதி கூறினார்.

தாய்பால் வாரவிழா

உலக தாய்பால் வாரவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்டு மாதம் 1–ந் தேதி முதல் 7–ந் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவின் சார்பில் நேற்று உலக தாய்பால் வாரவிழா கொண்டாடப்பட்டது. டீன் எட்வின் ஜோ தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் ராஜேந்திர ரத்னு, துணை முதல்வர் நெப்போலியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் வெள்ளைபாண்டியன் வரவேற்று பேசினார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் எஸ்.மதுமதி, குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார். விழாவில் அவர் பேசியதாவது:–

குழந்தைக்கு ஒரு தாய், தனது தாய்ப்பாலை கொடுப்பதை பற்றி மக்களுக்கு சொல்லிக்கொடுக்க ஒரு விழா தேவையா என்று நினைக்க தோன்றுகிறது. இருந்தாலும் பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்காமல் சென்றதால் தான் இதுபோன்ற விழாக்கள் கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. ஐந்து அறிவு உள்ள பசு, சிங்கம், புலி, ஆடு உள்ளிட்ட விலங்குகளுக்கு தனது குட்டிக்கு பால் கொடுக்க சொல்லிக் கொடுக்கவா வேண்டும் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

தாயின் பாசம்

தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தானாகவே தாய் பால் கொடுக்கவேண்டும். தாய் பால் கொடுத்தால் தான் அந்த குழந்தைக்கு தாயின் மீது பாசம் இருக்கும். தாய் பால் கொடுக்கும் பழக்கத்தை பெண்கள் கடந்த 20 வருடங்களாக தான் தவிர்த்து வருகிறார்கள். இதற்கு மூல காரணம் கூட்டு குடும்ப வாழ்க்கை இல்லாதது தான். அடுத்தது வேகமான உலகத்தில் வாழ்வதும் ஒரு காரணம். வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் புட்டி பாலை கொடுத்து விட்டு பணிக்கு செல்வது உள்ளிட்ட காரணங்கள். இதனை தவிர்க்க வேண்டும். குழந்தைக்கு குறைந்தது 6 மாதங்களாவது தாய் பால் ஊட்டவேண்டும்.

அந்த காலத்தில் வேலைக்கு செல்கின்ற பெண்கள் தங்கள் வேலை செய்கின்ற வயல்களின் அருகில் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டி தூங்க வைப்பார்கள். குழந்தை அழுதவுடனே பாலுக்கு தான் அழுகிறது என்று தெரியும் உடனே குழந்தைக்கு பால் கொடுப்பார்கள். ஆனால் தற்போது உள்ள தாய்மார்களுக்கு குழந்தை எதுக்கு அழுகிறது என்று கூட தெரிவதில்லை. குழந்தைக்கு பால் கொடுப்பது பற்றி தாய்மார்களுக்கு, நர்சுகள் சொல்லி கொடுக்க வேண்டும்.

சீம்பாலில் அதிக சத்து

தாய்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உடல் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். பிறந்த உடனே வருகிற சீம்பாலில் அதிக சத்து உள்ளது. தாய்பால் கொடுக்காமல் குழந்தைகளுக்கு புட்டி பால் வழங்குவதால் அந்த குழந்தைக்கு முதலிலேயே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. முதலிலேயே சர்க்கரையின் சுவையை உணர்ந்துவிடுவதால் தொடர்ந்து சர்க்கரையை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். இதனால் சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. தாய்பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்து தாய் பால் ஊட்டவேண்டும்.

குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் தாய்மார்கள் தங்களுக்கு தாய்பால் அதிகரிக்க கீரைவகைகள், பருப்புவகைகள், காய்கறி உணவுகளை அதிக அளவில் சாப்பிடவேண்டும்.

இவ்வாறு ஆணையாளர் எஸ். மதுமதி கூறினார்.

விழாவில் டாக்டர்கள் ஜெயமணி, பரிவர்த்தினி, நர்சிங் முதல்வர் ஈசுவரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குழந்தைகள் ஒப்படைப்பு

முன்னதாக ஆஸ்பத்திரியில் அனாதையாக விடப்பட்ட 2 பெண் குழந்தைகள் ஆஸ்பத்திரி மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த குழந்தைகளை அடைக்கலாபுரம் குழந்தைகள் பராமரிப்பு இல்ல நிர்வாகிகளிடம் டீன் டாக்டர் எட்வின் ஜோ ஒப்படைத்தார்.