Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாதாரண பஸ் பாஸ் உள்ள மாணவர்கள் சுவர்ணா பேருந்தில் பயணம் செய்ய அனுமதி

Print PDF

தினமணி 25.09.2009

சாதாரண பஸ் பாஸ் உள்ள மாணவர்கள் சுவர்ணா பேருந்தில் பயணம் செய்ய அனுமதி

பெங்களூர், செப். 24: சாதாரண பேருந்துக்கு பாஸ் வைத்திருக்கும் மாணவர்கள், முதியோர் இனி சுவர்ணா, புஷ்பக் பேருந்துகளிலும பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்தார்.

பெங்களூர் இரட்டைச் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் வோல்வோ மல்டி ஆக்ஸில் பஸ் சேவையை வியாழக்கிழமை அமைச்சர் அசோத் தொடங்கிவைத்தார்.

பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது:

விஜயதசமி பண்டிகையையொட்டி மாணவர்கள், முதியோர்களுக்கு சில சலுகைகளை அறிவிக்க பெங்களூர் நகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

தற்போது பஸ் பாஸ் பெற்றுள்ள மாணவர்கள், முதியோர்கள் சாதாரண நகரப் பேருந்துகளிலேயே பயணம் செய்ய முடியும். இனி அவர்கள் புஷ்பக், சுவர்ணா ரக பேருந்துகளிலும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். செப்டம்பர் 28-ம் தேதி முதல் இந்த சலுகை அமலுக்கு வருகிறது.

முதியோர்களுக்கு தற்போது பஸ்களில் பயணம் செய்ய டிக்கெட் கட்டணத்தில் அவர்களுக்கு 25 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் வோல்வோ பேருந்துகளில் அவர்கள் பயணம் செய்தால் இந்த சலுகை இல்லை. இனி வோல்வோ பேருந்துகளிலும் அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.

60 வயதை அடைந்ததற்கான முதியோர் சான்றிதழை நடத்துனரிடம் காட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. இதனால் சிலருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளது. எனவே, இனி அவர்கள் 60 வயதை அடைந்ததற்கான ஏதாவது ஓர் ஆதாரத்தைக் காட்டினால் போதும்.

பேருந்துகளில் பெண்கள் இருக்கையில் அமர்ந்தபடி ஆண்கள் பயணம் செய்வதாக புகார்கள் வந்துள்ளன. இவ்வாறு பயணம் செய்வோருக்கு அபராதம் விதிக்க நடத்துனருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை கடுமையாக அமல்படுத்தவில்லை. இனி பெண்கள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யும் ஆண்களுக்கு அபராதம் விதிப்பது கட்டாயமாக்கப்படும்.

தற்போது சர்வதேச விமானநிலையம், எலக்ட்ரானிக்சிட்டி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் வோல்வோ பேருந்துகளில் மட்டும் பயணிகளுக்கு தின்பண்டம் விநியோகிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

எனவே, இனி நகரில் இயக்கப்படும் எல்லா வோல்வோ பேருந்துகளிலும் தின்பண்டம் விநியோகத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றார் அவர்.

Last Updated on Friday, 25 September 2009 06:02