Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வேண்டுகோள்

Print PDF

தினத்தந்தி               19.06.2013

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வேண்டுகோள்


நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி கூறி உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது தொடர்பாக பொறியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி பேசியதாவது:–

மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்

மழைநீர் சேகரிப்பின் அவசியத்தையும், அதனால் உண்டாகும் நன்மைகளையும் பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், மாநகராட்சி அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் மற்றும் நீர்நிலைகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்கனவே 2002, 2003–ம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு அவை நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.

ஒரு சில கட்டமைப்புகள் புனரமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அவற்றை உடனடியாக வரும் பருவமழை காலத்தின்போது, சேமிப்பதற்கு ஏதுவாக புனரமைப்பு செய்யப்பட வேண்டும். புதிதாக அமைக்க வேண்டிய இடங்களில் உடனடியாக அமைத்திட வேண்டும். ஏனெனில் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மாநகராட்சி பகுதியிலும் அதேநிலை நிலவுகிறது.

குடிநீர் ஆதாரம்

குடிநீர் வழங்குவது மாநகராட்சியின் கடமை. ஆனால் குடிநீர் ஆதாரத்தை உருவாக்குவது பொதுமக்களின் கடமை. மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வகையான கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டாயம் அமைக்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளை மாநகராட்சி இளநிலை பொறியாளர் பிரிவு அலுவலகங்களிலும், கோட்ட அலுவலகங்களிலும் மாநகராட்சி மைய அலுவலகத்திலும் பொதுமக்கள் கேட்டு பயன்பெறலாம்.

நிலத்தடி நீர்மட்டம்

மேலும், இதற்கான எளிய முறைகளை கையாண்டு பொதுமக்கள் அனைவரும் நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்திட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். எனவே அரசு மற்றும் தனியார் கட்டிடங்களை ஆய்வு செய்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க வேண்டிய கட்டிடங்கள் அவற்றின் செயல்பாடுகள் குறித்த விபரங்களை தனி அறிக்கையாக சமர்ப்பிக்க ஒவ்வொரு வார்டுகளிலும் பொறியாளர்கள், துப்புரவு ஆய்வர்கள் மற்றும் சமுதாய அமைப்பாளர்கள், வரிதண்டலர்கள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு. இந்த குழுவானது அனைத்து கட்டிடங்களையும் ஆய்வுசெய்து மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், பழுதடைந்து உள்ள அமைப்புகளை புனரமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்து, தினசரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.