Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சிப் பள்ளிகளில் விளையாட்டுப் பூங்காக்கள்

Print PDF

தினமணி               19.06.2013

தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சிப் பள்ளிகளில் விளையாட்டுப் பூங்காக்கள்

தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டுப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

முதல்கட்டமாக தியாகராயநகர், சைதாப்பேட்டை உள்பட 10 மாநகராட்சிப் பள்ளிகளில் இந்தப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் ஓரிரு நாள்களில் அப்பணிகள் முழுமையாக நிறைவடையும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் 30 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக விளையாட்டுப் பூங்காக்கள் அமைக்கப்படும் என மாநகராட்சிப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி பள்ளிக்கு ரூ.2 லட்சம் செலவில், முதல்கட்டமாக 10 பள்ளிகளில் இந்த பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜூலை மாத இறுதிக்குள் மீதமுள்ள 20 பள்ளிகளிலும் விளையாட்டுப் பூங்காக்கள் அமைக்கப்படும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறியது:

மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்தும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்.கே,ஜி, யு.கே.ஜி வகுப்புகள் கொண்ட மாநகராட்சி மழலையர் பள்ளிகளில் தற்போது மாணவர்கள் அதிக அளவில் சேருகின்றனர். சைதாப்பேட்டையில் உள்ள பள்ளியில் இதுவரை 180 பேரும், அயனாவரத்தில் 50 பேரும் சேர்ந்துள்ளனர்.

என்னென்ன விளையாட்டு? மாநகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டுப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக "சறுக்கு விளையாட்டு', "ரோலர் கிளைடு', "ஊஞ்சல்', "டனல் விளையாட்டு', "ராக் வாக்', "ஸ்கொயர் கிளைம்பர்' உள்ளிட்ட விளையாட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக ஜோன்ஸ் சாலை, பிரகாசம் சாலை, கோபாலபுரம், கோட்டூர், திருவான்மியூர் உள்ளிட்ட 10 மாநகராட்சிப் பள்ளிகளில் இந்த விளையாட்டுப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் அவர்.