Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 812 அனுமதி பெறாத விளம்பரப் பலகைகள் அகற்றம்

Print PDF

தினமணி               18.06.2013

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 812 அனுமதி பெறாத விளம்பரப் பலகைகள் அகற்றம்

மதுரை மாநகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் திங்கள்கிழமை ஒரே நாளில் அனுமதி பெறாத 821 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன.

 விளம்பரப் பலகைகள், டிஜிட்டல் பேனர் போன்றவற்றை வைக்க அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக, உரிய கட்டணம் செலுத்த ஆட்சியர் தலைமையிலான  குழுவிடம் அனுமதி பெற வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும், பல இடங்களில் அனுமதி பெறாத விளம்பரப் பலகைகள் தொடர்ந்து வைக்கப்பட்டிருந்தன.

 அதையடுத்து, மாவட்டம் முழுவதும் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் அகற்ற ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா உத்தரவிட்டார். இதன்படி,  முதல்கட்டமாக மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் அனைத்து பேரூராட்சிப் பகுதிகளிலும் அனுமதி பெறாத விளம்பரப் பலகைகளை அகற்றும் பணி திங்கள்கிழமை துவங்கியது.

 இப் பணிக்கென மாநகராட்சிப் பகுதியில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும், தலா ஒரு வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறையினர் 7 பேர்,  மாநகராட்சி உதவிப் பொறியாளர் தலைமையில் 8 பேர் இடம் பெற்றிருந்தனர்.

  இக் குழுவினர் திங்கள்கிழமை ஒரே நாளில், மதுரை நகரின் பல்வேறு இடங்களிலும்  அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த 798 விளம்பரப் பலகைகளை அப்புறப்படுத்தினர்.

 பேரூராட்சிப் பகுதிகளில் 14 விளம்பரப் பலகைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

 இப்பணி இன்னும் ஒரு வாரத்துக்கு தொடர்ந்து நடைபெறும் என்றும், நகராட்சிப் பகுதிகளில் அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் அப்புறப்படுத்தும் பணி செவ்வாய்க்கிழமை துவங்குகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.