Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

30 இரவு நேர காப்பகங்கள்: இன்னும் 15 நாள்களில் செயல்படும்

Print PDF

தினமணி                 05.06.2013

30 இரவு நேர காப்பகங்கள்: இன்னும் 15 நாள்களில் செயல்படும்


சென்னை மாநகராட்சியில் திறப்பதாக அறிவிக்கப்பட்ட 30 இரவு நேர காப்பகங்கள் இன்னும் 15 நாள்களில் செயல்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகரங்களில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு இரவு நேர காப்பகம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி சென்னையில் 65 காப்பகங்கள் திறக்கப்படவேண்டும். சென்னையில் 15 இரவு நேர காப்பகங்கள் திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் மேலும் 15 காப்பகங்கள் திறக்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இப்போது 30 காப்பகங்களும் இன்னும் 15 நாள்களில் செயல்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியது: மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களில் 14 காப்பகங்களும், வாடகை கட்டடங்களில் 16 காப்பகங்களும் செயல்பட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காப்பகங்களை தொண்டு நிறுவனங்கள் பராமரித்து நிர்வகிக்க முடிவு செய்யப்பட்டு, தகுந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் செயல்படும் காப்பகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 10.10 லட்சமும், வாடகை கட்டடங்களில் செயல்படுத்தப்படும் காப்பகத்துக்கு ரூ. 13.10 லட்சமும் பராமரிப்பு தொகையாக வழங்கப்படும். ஆக மொத்தம் 30 காப்பகங்களுக்கும் ரூ. 3.51 கோடி செலவிடப்படும்.

குறைந்தது 30 பேர் தங்கும் வகையில் ஒரு காப்பகம் உருவாக்கப்படுகிறது. இடவசதியை பொருத்து எத்தனை பேர் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம். காப்பகத்தில் தங்குபவர்களுக்கு இரவு உணவு மட்டும் வழங்கப்படும். ஒரு நபருக்கு ஒருநாள் உணவுக்கென ரூ.25 தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

இந்த காப்பகங்களை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்படும். மேலும் அவுட் சோர்சிங் மூலம் கண்காணிப்பு அதிகாரி ஒருவரும் நியமிக்கப்படவுள்ளார். இந்தக் காப்பகங்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் வீடில்லா மக்கள் வசிக்கும் பகுதிகளில் திறக்கப்படுகின்றன. இந்தக் காப்பகங்களில் மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் ஆகியோரும் சென்று சேவையில் ஈடுபடுவார்கள்.

இப்போது திருவொற்றியூர், அம்பத்தூர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் தலா 2 காப்பகங்கள், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 3 காப்பகங்கள், ராயபுரம் மண்டலத்தில் 4 காப்பகங்கள், ஆலந்தூரில் 1 காப்பகமும் அமைக்கப்படும். பிற மண்டலங்களில் தேவைக்கேற்ப காப்பகங்கள் அமைக்கப்படும்.

காப்பகத்தை சரிவர பராமரிக்காத தொண்டு நிறுவனங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். கூடிய விரைவில் கூடுதலாக 35 இரவு நேர காப்பகங்கள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.