Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒசூர் புதிய பஸ் நிலைய கடைகளுக்கு செப். 25-ல் ஏலம்

Print PDF

தினமணி 23.09.2009

ஒசூர் புதிய பஸ் நிலைய கடைகளுக்கு செப். 25-ல் ஏலம்

ஒசூர், செப். 22: ஒசூர் புதிய பஸ் நிலைய கடைகளுக்கு ஏலம் செப். 25-ம் தேதி நடைபெறுகிறது. இப்புதிய பஸ் நிலையம் மூலம் நகராட்சிக்கு ரூ.3 கோடி வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

ரூ.8 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒசூர் புதிய பஸ் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நவம்பர் மாதம் இறுதியில் முடிவடைந்து, புத்தாண்டுக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பஸ் நிலையத்தில் 76 பஸ்கள் ஒரே நேரத்தில் நிற்கும் வகையிலும், நகர பஸ்கள் வந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

புதிய பஸ் நிலையத்தில் கீழ் தளத்தில் 29 கடைகளும், முதல் தளத்தில் 47 கடைகளும் 2 உணவு விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன.

இந்தக் கடைக்கான ஏலம் வரும் செப்.25-ல் ஒசூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் என நகராட்சி ஆணையர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

கீழ் தளத்தில் உள்ள ஒரு கடை ஏலத்தில் எடுக்க ரூ.10 லட்சம் மதிப்பிலான சொத்து மதிப்புச் சான்று பெற்றிருக்க வேண்டும், கடைக்கு முன் வைப்புத் தொகை ரூ.4 லட்சம் செலுத்த வேண்டும். ஒரு வருட கடை வாடகையாக குறைந்தபட்சம் ரூ.60 ஆயிரம் முன்தொகை செலுத்த வேண்டும், இதற்கு மேல் ஏலம் கோரலாம் என ஏல நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேல் தளத்தில் உள்ள கடைகளுக்கு இந்தத் தொகையில் 80 சதவிகித வைப்புத் தொகை மற்றும் வாடகை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதனால் ஒசூர் நகராட்சிக்கு நிரந்தர வைப்புத் தொகையால் ரூ.2 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் கடை வாடகை, பஸ் நுழைவுக் கட்டணம், கழிவறைகள் ஏலம், வாகனங்கள் நிறுத்துமிட வாடகை உள்ளிட்டவற்றால் ரூ.1 கோடி வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதாக நகராட்சி அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.

Last Updated on Wednesday, 23 September 2009 06:19