Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டச் செலவு ரூ.12 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு

Print PDF

தினமணி 22.09.2009

பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டச் செலவு ரூ.12 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு

பெங்களூர், செப். 21: பொருளாதார நெருக்கடி, விலை உயர்வு ஆகிய பிரச்னைகளால் பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டச் செலவு 2 மடங்காக அதிகரித்து ரூ. 12 ஆயிரம் கோடியாக உயர்கிறது.

பெங்களூர் நகர மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 24-6-2006-ல் பிரதமர் மன்மோகன்சிங் அடிக்கல் நாட்டினார். மெட்ரோ ரயில் பாதைகள் பெங்களூரில் 33 கிலோ மீட்டர் தூரம் அமையும். இதில் 7 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப் பாதையாக இருக்கும்.

மெஜஸ்டிக் பகுதியைச் சுற்றி அமைக்கப்படவுள்ள மெட்ரோ ரயில் பாதை சுரங்கப்பாதையாக இருக்கும். இது 7 கிலோ மீட்டர் தூரமாகும்.

மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த செலவு ரூ. 6,395 கோடியாக கணக்கிடப்பட்டது. இதில் மத்திய அரசு ரூ. 1,447 கோடியையும் கர்நாடக அரசு ரூ. 1,807 கோடியையும் அளிக்கும். மீதி தொகையான ரூ. 2,953 கோடியை நிதி நிறுவனங்களிடமிருந்து கடனாகப் பெற முடிவு செய்யப்பட்டது.

திட்டம் துவங்கிய மூன்றரை ஆண்டுகளில் அதாவது 2009-ம் ஆண்டு அக்டோபரில் மெட்ரோ ரயில் ஓடத் துவங்கும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை முதல் கட்டத் திட்டப்பணிகளே இன்னும் நிறைவடையவில்லை.

இந்நிலையில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவையும் பாதித்துள்ளது. இதனால் இந்தியாவில் தொழில்கள் பாதிக்கப்பட்டு, மத்திய, மாநில அரசுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

மேலும் விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. இந்நிலையில் மெட்ரோ ரயில் திட்டம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட 33 கிலோ மீட்டரை விட கூடுதலாக 8.8 கி.மீ. நீட்டிக்கப்பட்டுள்ளது.

விலை ஏற்றம், பொருளாதார நெருக்கடி, திட்டம் நீட்டிப்பு ஆகிய பிரச்னைகளால் திட்டச் செலவு ஏற்கெனவே மதிப்பிட்டிருந்ததைவிட இரு மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது திட்டச் செலவு ரூ. 12 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்று அடிப்படை கட்டமைப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "மெட்ரோ ரயில்திட்டச் செலவு அதிகரிப்பு குறித்து அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் மெட்ரோ ரயில் கழக அதிகாரிகளுடன் விவாதிக்க உள்ளோம். செலவு அதிகரிக்க திட்டப் பணிகள் தாமதமும் காரணமாகும்' என்றார் .

மேலும் மெட்ரோ ரயில் 8.8 கி.மீ. தூரத்துக்கு நீட்டிக்கப்படுதால் கூடுதலாக ரூ. 1,763 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து திட்டச் செலவு ரூ. 12 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்போதே மெட்ரோ ரயில் பணிகள் திட்டமிட்டதைவிட 6 மாதம் தாமதமாக நடந்து வருகிறது. இப்போது நடைபெறும் பணியின் வேகத்தைப் பார்த்தால் அது இன்னும் தாமதமாகும் என்று கருதப்படுகிறது.

மெட்ரோ ரயில் செல்லும் பாதை விவரம்:

கிழக்கு-மேற்காக பையப்பனஹள்ளி-மைசூர் சாலை. (18.10 கிமீ.)

வடக்கு-தெற்காக யஷ்வந்தபுரம்-ஆர்.வி. சாலை (14.90 கி.மீ.).

மொத்தம் 33 கிலோ மீட்டர்.

புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகள் விவரம்: ஆர்.வி.சாலை- புட்டேனஹள்ளி (3.2 கி.மீ).

யஷ்வந்தபுரம்- ஹெசரகட்டா (5.6கி.மீ).

Last Updated on Tuesday, 22 September 2009 05:30