Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குளுகுளு' பயணி நிழற்குடை சென்னைக்கு வருமா ?

Print PDF
தினமலர்                08.05.2013

குளுகுளு' பயணி நிழற்குடை சென்னைக்கு வருமா ?


இந்தியாவிலேயே முதன்முறையாக, குளிர் சாதன வசதி செய்யப்பட்ட பயணிகள் நிழற்குடை, கும்பகோணத்தில் திறக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் நகரில், 20க்கும் மேற்பட்ட இடங்களில், பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடைகள் நகராட்சியால் பாராமரிக்கப்படுகிறது. கும்பகோணம் மொட்டைகோபுரம், ரயில்வே ஸ்டேஷன் மேம்பாலம், நால்ரோடு உள்ளிட்ட, பத்து இடங்களில் உள்ள நிழற்குடைகளை, குளிரூட்டப்பட்ட நிழற்குடையாக மாற்ற கடந்த நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இதில், முதற்கட்டமாக, கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில், நால்ரோடு அருகே, அதிக அளவில் பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்து பயணம் செய்வதால், அந்த இடத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி சார்பில், 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிழற்குடையில், கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுளளது. நகராட்சி அலுவலகத்தில் இருந்தபடி, இந்த நிழற்குடையை கண்காணிக்க முடியும்.மேலும், பொது தொலைபேசியில் காசு போட்டு பேசும் வசதி, கணினி மூலம், பிறப்பு, இறப்பு சான்றிதழை டவுன்லோடு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் நிழற்குடையின் ஒரு பகுதியில், சிட்டி யூனியன் வங்கியின், ஏ.டி.எம்., பொருத்தப்பட்டுள்ளது.

சென்னைக்கு வருமா "ஏசி' நிழற்குடை?

பயணிகளை கவரும் வகையில், கும்பகோணத்தில், "ஏசி' வசதியுள்ள நிழற்குடை அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில், சாதாரண நிழற்குடைகளை கூட, தேவைக்கேற்ப அமைக்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.சென்னை மாநகராட்சி பகுதியில், மெட்ரோ ரயில் பணி, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட, பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக, பெரும்பாலான நிழற்குடைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து, சென்னை முழுவதும், 1,035 நவீன நிழற்குடைகள் அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டது.இதற்காக, கட்டுதல், பராமரித்தல், ஒப்படைத்தல் முறையில், நவீன நிழற்குடைகள் அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது.

கோடையை கருத்தில் கொண்டு, பொது நிதியில் இருந்து, 200 நிழற்குடைகளை அமைக்க, மாநகராட்சி முடிவு செய்து, அந்த பணியும் பெரிதாக துவங்கவில்லை.இதனால், பெரும்பாலான பயணிகள், "வானமே நிழற்குடை' என, சுட்டெரிக்கும் வெயிலில் தவிக்கின்றனர். சாதாரண நிழற்குடைகளை விரைவில் அமைப்பதோடு, மற்ற மாவட்டங்களுக்கு உதாரணமாக, சென்னையிலும் கும்பகோணத்தில் இருப்பது போன்ற, "குளு குளு' வசதி கொண்ட, நிழற்குடைகளை அமைத்து தர வேண்டும் என, பயணிகள் தரப்பில் வேண்டுகோள் வைத்துள்ளனர்.