Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒண்டிப்புதூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி

Print PDF
தினமணி      05.04.2013

ஒண்டிப்புதூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி


கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட ஒண்டிப்புதூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, மாநகராட்சிக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்கீழ் ஒண்டிப்புதூரில் பட்டணம் இட்டேரி சாலையில் 60 எம்.எல்.டி. கழிவு நீரைச் சுத்திகரிக்க ரூ.62.82 கோடி செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.

இதற்காக கடந்த ஆண்டு மே 5-ஆம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் சுத்திகரிப்பு நிலையக் கட்டுமானப் பணிகளைத் துவக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி கேட்டது. ஆனால், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவுள்ள இடம் தொடர்பான ஆவணங்களை மாநகராட்சி வழங்காததால் அனுமதி அளிக்க காலதாமதம் ஆனதாகக் கூறப்படுகிறது. இந் நிலையில், கடந்த மார்ச் 18-ஆம் தேதி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியளித்தது.

குடியிருப்புப் பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனைத்து நெறிமுறைகளையும் மாநகராட்சி கடைப்பிடித்துள்ளது. இதையடுத்து, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் சுத்திகரிப்பு நிலையத்தை மாநகராட்சி அமைக்க வேண்டும்.

அப்படி அமைக்காவிட்டால் மீண்டும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். இக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்காக 14.34 ஏக்கர் நிலத்தை மாநகராட்சி கையகப்படுத்தியுள்ளது.

ஒண்டிப்புதூரில் அமைய உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கிழக்கு மற்றும் வடக்கு மண்டலப் பகுதிகளின் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட உள்ளது.

கணபதி, பீளமேடு, ஆவாரம்பாளையம் மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் முடிந்தவுடன் இப் பகுதிகளில் சேரும் கழிவு நீர் முழுமையாக ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட உள்ளது. உக்கடம் பகுதியில் 20 எம்.எல்.டி. கழிவு நீரைச் சுத்திகரிக்கும் நிலையம் செயல்படுகிறது. நஞ்சுண்டாபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இத் தடையை நீதிமன்றத்தில் விரைவில் நீக்கி மீண்டும் பணிகளைத் துவக்க உள்ளதாக மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.