Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பரமக்குடியில் திறன் மேம்பாட்டுக்கான நேர்காணல் சிறப்பு முகாம்

Print PDF
தினமணி         29.03.2013

பரமக்குடியில் திறன் மேம்பாட்டுக்கான நேர்காணல் சிறப்பு முகாம்


பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு மத்திய, மாநில அரசின் இலவச வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான நேர்காணல் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு நகர்மன்றத் தலைவர் எம். கீர்த்திகா தலைமையேற்று துவக்கி வைத்தார். நகர்மன்றத் துணைத் தலைவர் டி.என். ஜெய்சங்கர், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆர். குணசேகரன், எம்.ஏ. முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் கே. அட்ஷயா வரவேற்றார்.

இதில் சி.எஸ்.சி. கம்யூட்டர் சென்டர், ஆர்.எஸ்.கே. டெக்னாலஜிஸ், சி.எம்.டி.இ.எஸ். கம்யூட்டர் சென்டர், நேசனல் அகாதெமி தொழிற்பயிற்சி பள்ளி ஆகிய பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் சார்பில் நேர்காணல் நடைபெற்றது.     இச்சிறப்பு முகாமை துவக்கி வைத்து நகர்மன்றத் தலைவர் பேசியதாவது: சுவர்ணஜெயந்தி சகாரி ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய, மாநில அரசின் நிதி உதவியால் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.    இப்பயிற்சிக்கு 18 முதல் 35 வயதுக்குட்பட்ட, 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தோல்வியுற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி நிறுவனங்கள் சார்பில் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.

நேர்காணலில் தேர்வு பெற்றவர்களுக்கு கம்யூட்டர் பயிற்சி, தையல் பயிற்சி, எம்பிராய்டரி, மகப்பேறு உதவியாளர், நர்ஸிங் உதவியாளர் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுநர் மற்றும் உரிமம் பெறுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதனை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, தங்களின் திறன் மேம்பாட்டினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.

நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள், பயிற்சி நிறுவனத்தினர் மற்றும் பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் பி. ரத்தினக்குமார் நன்றி கூறினார்.