Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 3 மாதங்களில் நிறைவடையும்

Print PDF
தினமணி         26.03.2013

பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 3 மாதங்களில் நிறைவடையும்


கடலூரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 3 மாதங்களில் முடிவுறும் என மாவட்டக் கண்காணிப்பு அதிகாரியிடம் குடிநீர் வாரிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டப் பணிகள் குறித்து மாவட்டக் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனை, தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், சில்வர் பீச்சில் உள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்கா, படகு குழாம்களைப் புதுப்பிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினத்தில் கட்டப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்ட பணிக்கான சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டு, அங்கிருந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அதிகாரிகள் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரை கெடிலம் ஆற்றில் கலக்க மூன்றரை கி.மீ. தூரத்துக்கு குழாய் பதிக்கப்பட வேண்டியுள்ளது.

இதற்கான குழாய்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. குழாய்கள் வந்ததும், ஏப்ரல் மாதத்துக்குள் புதைக்கப்பட்டு விடும்.

இருப்பினும், பிரதான உந்து (பம்பிங்) நிலையத்தில் மூன்று கிணறுகளில் இரண்டு அமைக்கப்பட்டதாகவும், ஒரு கிணறு இறக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அதேப் போன்று வண்ணாரப்பாளையத்தில் மேன்ஹோல் அமைக்கும் பணியும், குழாய் புதைக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்தப் பணிகள் வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்றனர்.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறிய காலக்கெடுவை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், இந்தப் பணியை அடுத்த மாதக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என்று அதிகாரிகளிடம் ககன்தீப்சிங்பேடி தெரிவித்தார்.

தொடர்ந்து, வண்ணாரப்பாளையத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணி, புதிதாக அமைக்கப்பட்ட ஜவான்ஸ் பவன் சாலை ஆகியவற்றை பார்வையிட்டார்.

தேவனாம்பட்டினம் உப்பனாற்றங்கரையில் கட்டப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டபோது, தேவனாம்பட்டினம் சுனாமி குடியிருப்புப் பகுதி மக்கள், ககன்தீப்சிங்பேடியின் காரை சூழ்ந்து கொண்டு, தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுவதாகக் கூறியதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி கூறினார்.