Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மகளிர் குழுக்கள், தனிநபர்களுக்கு மானியக்கடன் - ஒரே நாளில் 4.33 கோடி ரூபாய்க்கு கடன் உத்தரவு

Print PDF
தினமலர்           28.02.2013

மகளிர் குழுக்கள், தனிநபர்களுக்கு மானியக்கடன் - ஒரே நாளில் 4.33 கோடி ரூபாய்க்கு கடன் உத்தரவு

கோவை மாநகராட்சியிலுள்ள மகளிர் சிக்கன நாணய சங்கத்திற்கும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கும், நேற்று ஒரே நாளில் 4.33 கோடி ரூபாய் கடன் உத்தரவு வழங்கப்பட்டது.

கோவை மாநகராட்சியிலுள்ள மகளிர் சிக்கன நாணய சங்கத்தினருக்கு, சுழல்நிதி, குழுக்கடன், தனி நபர்கள் கடன்கள் மானியத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகளிரை சுய தொழில் முனைவோர்களாக மாற்ற, குழுக்களுக்கு மானியத்துடன் வங்கி கடன் வழங்கும் முகாம் நேற்று நடந்தது.

மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலகத்தில் நடந்த முகாமில், கனரா வங்கி, பாங்க் ஆப் பரோடா வங்கி மேலாளர்கள், மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் சுமதி ஆகியோர் கடன் பெறுவோரை தேர்வு செய்தனர்.

மகளிர் சிக்கன நாணய சங்கங்களின் தொழில் துவங்குவதற்கான திட்ட அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், 30 குழுவினருக்கு கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது. குழுவினருக்கு, பேப்பர் கப், மெஸ், டெய்லரிங், துணி வியாபாரம் உள்ளிட்ட தொழில்கள் துவங்க கடன் வழங்கப்பட்டது.

குழுவினருக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாயும், அதிகபட்சமாக ஐந்து லட்சம் ரூபாய் வரையிலும் கடன் வழங்கப்பட்டது. கடன் தொகையில் 35 சதவீதம் மானியமாக வழங்கப்பட்டது. குழுவினருக்கு மொத்தம் 150.96 லட்சம் கடன் வழங்கப்பட்டது; அதில், 52.97 லட்சம் ரூபாய் மானியம்.

மாநகராட்சியில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள பெண்களுக்கு, சுயதொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களின் சுய தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க, தனி நபர் கடன் வழங்கப்பட்டது.

மொத்தம் 135 பேர் தனி நபர் கடன் வேண்டி விண்ணப்பித்தனர். அதில், 25 பேரின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 110 பேருக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாயும், அதிகபட்சமாக இரண்டு லட்சம் ரூபாயும் கடன் வழங்கப்பட்டது. அரசு மானியாக 25 சதவீதம் வழங்கப்பட்டது.

தனிநபர் கடனாக மொத்தம் 281.80 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது; அரசு மானியம் 70.45 லட்சம் ரூபாய். கடன் உத்தரவு நகல் குழுக்களுக்கும், தனிநபருக்கும் <உடனடியாக வழங்கப்பட்டது.

நகர்நல அலுவலர் கூறுகையில், ""முகாமில் மொத்தம் 4.33 கோடிக்கு கடன் உத்தரவு வழங்கப்பட்டது. இதில், 1.23 கோடி ரூபாய் அரசு மானியம். கடன் பெறுவோர், சுயதொழில் துவங்க வேண்டும். வங்கியில் பெறும் கடனை முறையாக திரும்ப செலுத்தினால், மறுபடியம் கடன் கிடைக்கும். சுயதொழில் முனைவோராக மாறும் போது, பெண்களால் சொந்தக்காலில் நிற்க முடியும். கடன் பெறும் தொகையை வேறு பணிகளுக்கு செலவு செய்ய கூடாது'' என்றார்.
Last Updated on Friday, 01 March 2013 07:58