Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பனமரத்துப்பட்டி ஏரி மரங்கள் `5.11 லட்சத்துக்கு ஏலம் மாமன்ற கூட்ட முடிவுக்கு காத்திருப்பு

Print PDF
தினகரன்           31.08.2012

பனமரத்துப்பட்டி ஏரி மரங்கள் `5.11 லட்சத்துக்கு ஏலம் மாமன்ற கூட்ட முடிவுக்கு காத்திருப்பு

சேலம்,: சேலம் பனமரத்துப்பட்டி ஏரியில் உள்ள பலன் தரும் மரங்கள் `5.11 லட்சத்திற்கு ஏலம் போனது.

சேலம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமாக சுமார் 2300 ஏக்கரில் பனமரத்துப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நீர்வரத்து நின்று போனதையடுத்து, ஏரி முழுவதும் வேலிகருவை மரங்கள் முளைத்தன. மேலும் ஏரியில் 1772 தென்னை, 132 பனை, 20 புளியமரங்கள், 8 மாமரங்கள், 2 கொய்யா, 7 நெல்லிமரம், ஒரு பாக்குமரம் என மொத்தம் 1942 மரங்கள் உள்ளன. இந்த மரங்களை ஏலம் விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி தென்னை, பனை உள்ளிட்ட 1942 மரங்களையும் ஓராண்டுக்கு பராமரித்து அனுபவித்துக்கொள்ள 2 முறை ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது.ஆனால் வியாபாரிகள் யாரும் வரவில்லை. இந்நிலையில் கடந்த 14ம் தேதி மாநகராட்சி மைய அலுவலகத்தில் 3வது முறையாக நடந்த ஏலத்தில், 3 வியாபாரிகள் கலந்து கொண்டனர். அதிகபட்சமாக `2 லட்சத்து 2 ஆயிரத்துக்கு முருகன் என்பவர் ஏலம் எடுத்தார். இதுகுறித்து ஆலோசித்த மாநகராட்சி கமிஷனர் அசோகன், மறு ஏலம் நடத்த உத்தரவிட்டார்.

இதன்படி சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று மறு ஏலம் நடந்தது. உதவி கமிஷனர் கணேசன் தலைமையில் நடந்த இந்த ஏலத்தில் 3 வியாபாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் `5.11 லட்சத்துக்கு மணிகண்டன் என்ற வியாபாரி 1942 மரங்களையும் ஏலம் எடுத்தார். இதுகுறித்து கமிஷனர் அசோகனிடம் கேட்டபோது, ‘பனமரத்துப்பட்டி ஏரியில் உள்ள 1942 மரங்களும் உச்ச தொகையாக `5.11 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு மரங்களை ஓராண்டுக்கு பராமரித்து பலனை அனுபவிக்க அனுமதி வழங்கலாமா என மாமன்ற கூட்டத்தின் முடிவுக்கு விட உள்ளோம். அதில் எடுக்கப்படும் முடிவை பொறுத்து, இறுதி முடிவு எடுக்கப்படும்,‘ என்றார்.