Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்திற்கு ரூ. 45 லட்சம் நிதி

Print PDF

தினமணி                30.07.2012

ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்திற்கு ரூ. 45 லட்சம் நிதி

பரமக்குடி, ஜூலை 29: பரமக்குடி நகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சிக்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், புதிய டம்பர் பிளேசர் வாகனத்தை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ் சனிக்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

  இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் எம்.கீர்த்திகாமுனியசாமி தலைமை வகித்தார். நகர்மன்ற துணைத் தலைவர் டி.என்.ஜெய்சங்கர், நகர்மன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.முனியசாமி, குணா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் கே.அட்ஷயா வரவேற்றார்.

  திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் புதிய டம்பர் பிளேசர் வாகனத்தை துவக்கி வைத்து அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ் பேசியது: பரமக்குடி நகராட்சி சுகாதாரமாக விளங்கிட திடக்கழிவுகளை அகற்றிட ரூ. 16.50 லட்சத்தில் புதிய டம்பர் பிளேசர் வாகனமும், அனைத்து வார்டுகளிலும் குப்பைகளைக் கொட்டி வைப்பதற்காக ரூ. 23 லட்சத்தில் புதிய டம்பர் பிளேசர் தொட்டிகளும், ரூ. 5.75 லட்சத்தில் மூன்று சக்கர சைக்கிள்களும் வாங்கி பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.

 மேலும் பரமக்குடி நகராட்சி சிறந்து விளங்கிட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் ரூ. 3.5 கோடி நிதியில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட உள்ளது. தற்போது முதுகுளத்தூர் ரயில்வே கேட் பகுதியிலிருந்து ரயில்வே துறையின் அனுமதியுடன் இருபுறமும் கழிவுநீர் செல்ல வாறுகால் தோண்டப்பட்டுள்ளது.

 அனைத்து நகர் பகுதிகளைப் போன்று கிராமப் பகுதிகளிலும் திடக் கழிவுகளை அகற்ற ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் மகளிருக்காக சுகாதார வளாகங்கள் கட்டித் தர இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

  நகர் பகுதியை சுகாதாரமாக வைத்துக் கொள்ள நகராட்சி மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். மேலும் நகராட்சி சார்பில் வைக்கப்படும் குப்பைத் தொட்டிகளில் குப்பைகளைக் கொட்டும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

   விழாவில் மாவட்ட அண்ணா தொழிற்சங்கப் பொருளாளர் எம்.நாகராஜன், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஐ.கிருஷ்ணமூர்த்தி, பிரகாசம், வழக்கறிஞர் பிரிவு சரவண பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்ப பலர் கலந்துகொண்டனர். நகராட்சி பொறியாளர் என்.குருசாமி நன்றி கூறினார்.