Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புது நகர் வளர்ச்சி குழுமத்தில் நிதி முடக்கம்: பயன்பாடு இல்லாமல் ரூ.8 கோடி

Print PDF

தினமலர்            01.12.2010

புது நகர் வளர்ச்சி குழுமத்தில் நிதி முடக்கம்: பயன்பாடு இல்லாமல் ரூ.8 கோடி

ஓசூர்: ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழுமத்தில் உள்ள 8 கோடி ரூபாய் எந்த வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு செலவழிக்கப்படாமல் முடங்கி போய் உள்ளது. தமிழக நகர் ஊரமைப்பு துறையின் கீழ் ஓசூர் புது நகர் வளர்ச்சி குழுமம் செயல்படுகிறது. இதன் தலைவராக கலெக்டர் அருண்ராய் உள்ளார். உறுப்பினர்களாக ஓசூர் எம்.எல்.., கோபிநாத், வேலூர் நகர் ஊரமைப்பு துணை இயக்குனர், தமிழ்நாடு வீட்டுவசதிவாரியம் செயற்பொறியாளர், "ஹோஸ்டியா' சேர்மன் ஆகியோர் உள்ளனர். புது நகர் வளர்ச்சி குழுமத்தின் மூலம் ஓசூர் நகராட்சி, மத்திகிரி டவுன் பஞ்சாயத்து மற்றும் 56 புறநகர் கிராமங்களில் புதிதாக அமைக்கப்படும் வீட்டுமனைகள், வீடுகள் மற்றும் வர்த்தக கட்டிடங்களை ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கப்படுகிறது. கட்டிட மற்றும் வீட்டுமனை உரிமையாளர்கள் அங்கீகாரம் பெறுவதற்கு புதுநகர் வளர்ச்சி குழுமத்தில் சதுர அடிக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் புதுநகர் வளர்ச்சி குழுமத்துக்கு மாதந்தோறும் பல லட்சம் வருமானம் கிடைத்து வருகிறது. ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழுமத்தினர் இந்த நிதியை பயன்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளில் புதிய சாலைகள், ஏரிகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளவும் உறுப்பினர்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றி செலவிடலாம்.

மாதம் ஒரு முறை கலெக்டர் தலைமையில் புதுநகர் வளர்ச்சி குழும உறுப்பினர்கள் கூடி ஆய்வு செய்து, நிலுவையில் உள்ள நிதியை பயன்படுத்தி புதிய திட்டங்களுக்கு செலவிடலாம். ஆனால், கடந்த நான்கு ஆண்டாக புதுநகர் வளர்ச்சி குழு நிர்வாக குழு கூட்டம் முறையாக நடக்கவில்லை. இதனால், புதுநகர் வளர்ச்சி குழுமத்தில் வசூலாகும் நிதி, பொதுமக்களின் அடிப்படை வளர்ச்சி பணிகளுக்கு செலவிடப்பாமல் தற்போது 8 கோடி ரூபாய் நிதி முடங்கி போய் உள்ளது. இந்நிலையில், கலெக்டர் அருண்ராய் தலைமையில் புதுநகர் வளர்ச்சி குழும உறுப்பினர்களை அழைத்து, முடங்கி போய் உள்ள நிதியை பயன்படுத்தி ஓசூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கும், ராமநாயக்கன் ஏரியை அழகுப்படுத்தும் திட்டத்துக்கும் பயன்படுத்த வேண்டும் என கூறி முடிவு செய்தனர். இதற்கு தமிழக நகர் ஊரமைத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனால், ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழுமத்தில் முடங்கி போய் 8 கோடி ரூபாய் நிதியை மக்களின் அடிப்படை வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும், புதிய திட்டங்களை மேற்கொள்ளவும் பயன்படுத்த முடியாமல் புதுநகர் வளர்ச்சி குழும நிர்வாக குழு பெயரளவில் மட்டும் செயல்படுகிறது.

 கடந்த இரு ஆண்டுக்கு புதுநகர் வளர்ச்சி குழுமத்தின் சேர்மனாக இருந்த அப்போதைய கலெக்டர் சந்தோஷ்பாபுவும் புதுநகர் வளர்ச்சி குழும நிதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுத்தார். ஆனால், அவரது நடவடிக்கைக்கும் நகர ஊரமைப்பு துறை நிர்வாகம் அனுமதி வழங்காமல் இழுத்தடித்தது. இதனால், புதுநகர் வளர்ச்சி குழுமத்தின் சேர்மனாக இருக்கும் கலெக்டர் மற்றும் உறுப்பினர்களாக இருக்கும் அரசு துறை அதிகாரிகள் புதுநகர் வளர்ச்சி குழுமத்தின் செயல்பாடுகளை கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருகின்றனர். இதனால், புதுநகர் வளர்ச்சி குழும நிதி எந்த பயன்பாட்டிற்கு பயன்படாமல் வீணாகி வருகிறது.