Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆண்டுக்கு 16 ஆயிரம் பிரசவங்கள்: மாநகராட்சி மருத்துவமனைகள் சாதனை

Print PDF

தினமலர்                       29.11.2010

ஆண்டுக்கு 16 ஆயிரம் பிரசவங்கள்: மாநகராட்சி மருத்துவமனைகள் சாதனை

சென்னை : சென்னை நகரில் நடைபெறும் மொத்த பிரசவங்களில், ஐந்தில் ஒரு பங்கு மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் நிகழ்கிறது. கடந்த ஆண்டு 16,503 பிரசவங்களும், இந்த ஆண்டு இதுவரை 11,102 பிரசவங்களும் நிகழ்ந்துள்ளன.சென்னை மாநகராட்சி பராமரிப்பில் 93 நலவாழ்வு மையங்கள் உள்ளன. சென்னையில், சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் உள்ள மகப்பேறு மருத்துவமனை, பெருமாள்பேட்டை மகப்பேறு மருத்துவமனை மட்டுமே 24 மணி நேரமும் செயல்பட்டு வந்தன. மற்ற நலவாழ்வு மையங்களில், சாதாரணமாக பிரசவங்கள் நிகழ்வது மற்றும் பரிசோதனை முறைகள் மட்டும் செயல்பட்டன.சென்னை மேயராக சுப்ரமணியன் பொறுப்பேற்ற பின், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக, மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டது. மண்டலத்திற்கு ஒன்று வீதம் 10 மண்டலங்களிலும், 24 மணி நேரமும் செயல்படும் மகப்பேறு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. பிரசவ அறைகள் குளிர்பதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன.

அயனாவரம் யுனைடெட் இந்தியா நகரில், ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பேசின் பிரிட்ஜ், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, அடையாறு, புளியந்தோப்பு, கோடம்பாக்கம் ஆகிய ஏழு மண்டலங்களில் 16 கோடியே 53 லட்ச ரூபாய் செலவில் மகப்பேறு மருத்துவமனை கட்டடங்கள் கட்டப்படுகின்றன.அதோடு, சைதாப்பேட்டை, மகப்பேறு மருத்துவமனை கட்டடத்தில், மேலும் நான்கு கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு, 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றுவதற்கான பணிகள் நடக்கின்றன. மாநகராட்சியின் 93 நலவாழ்வு மையங்களிலும், "அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' கருவிகள் பொருத்தப்பட்டு, கர்ப்பிணிப் பெண்கள் பரிசோதிக்கப்படுகின்றனர்.

 மாநகராட்சி நலவாழ்வு மையங்களில் பதிவு செய்துள்ள கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களின் கணவர்களுக்கு எச்..வி., பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. அதோடு, கர்ப்ப கால சர்க்கரை நோய் கண்டறியும் பரிசோதனையும் இலவசமாக செய்யப்படுகிறது.மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும், மாநகராட்சி சார்பில் புத்தாடை, டவல், சோப்பு, பவுடர் ஆகியவை அடங்கிய பரிசுப் பை மற்றும் பாதுகாப்பு வலையுடன் கூடிய, கதகதப்பு மெத்தையும் வழங்கப்படுகிறது.மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில், குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்டு பிரசவித்த தாய்மார்களுக்கு மூன்று நாட்களுக்கு இலவசமாக பத்திய உணவு வழங்கும் திட்டமும் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.அதிகரிக்கும் பிரசவங்கள்: கடந்த 2005ம் ஆண்டு மாநகராட்சி மருத்துவமனைகளில், ஆண்டிற்கு ஏறத்தாழ 15 ஆயிரம் பிரசவங்கள் மட்டுமே நிகழ்ந்தன. மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகள் பல வகைகளில், மேம்படுத்தப்பட்டதால், பொதுமக்கள் அதிக அளவில், மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளுக்கு வரத் தொடங்கினர். மகப்பேறு காலத்தில் குழந்தைகள் இறப்பைக் குறைத்தல், பிரசவ காலத்தில் பெண்கள் இறப்பைக் குறைத்தல் ஆகியவற்றில் உலக சுகாதார அமைப்பு மேற்கொள்ளும் திட்டப்படி மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி அதிக நிதியை ஒதுக்கி வருகின்றன.

அந்த அடிப்படையில் மாநகராட்சிகளில் வாழும் மக்களுக்கென்று பிரத்யேக திட்டங்களும் நிதி ஒதுக்கீடும் உள்ளது.இவற்றை அமல்படுத்தியதின் விளைவாக, கடந்த ஆண்டு மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில், 16 ஆயிரத்து 503 பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த ஆண்டு அக்டோபர் இறுதி வரை 11 ஆயிரத்து 102 பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன. ஒரு ஆண்டில் சென்னையில் நடக்கும் மொத்த பிரசவங்களில் ஐந்தில் ஒரு பங்கு பிரசவங்கள் மாநகராட்சி மருத்துவமனைகளில் நடப்பதாக, குடும்ப நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயிரம் இருந்தும்... வசதிகள் இருந்தும்... :

மாநகராட்சி மருத்துவமனைகளில் நவீன கருவிகள், சலுகைகள், இலவச திட்டங்கள் என பல வசதிகள் இருந்தாலும், இம்மருத்துவமனைகளுக்கு வருவதற்கு பொதுமக்கள் தயங்கும் சூழ்நிலை முழுமையாக விலகவில்லை.இங்கு பணிபுரியும் ஊழியர்கள் மரியாதை கொடுத்துப் பேசுவது இல்லை. சில நேரங்களில், தகாத வார்த்தைகளால் கொச்சையாக பேசுகின்றனர். பிறக்கும் குழந்தைகளை கண்ணில் காட்டுவதற்கு பணம் கேட்கின்றனர் என்ற புகார் பரவலாக உள்ளது. இந்த தயக்கத்தையும், பயத்தையும் போக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரத்தில் வாழ்ந்த போதும் கர்ப்பிணிப் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை சுகாதார நலன்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க இந்த மருத்துவமனைகளில் அதிக டாக்டர்கள் மற்றும் செவிலியர் அதிகரிக்கப்பட வேண்டும்.