Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

எம்மார் நிறுவனத்திடம் இருந்து ரூ93கோடி உத்தரவாத தொகை பெற நிதியமைச்சகம் தலையிட வேண்டும்

Print PDF

தினகரன்                16.11.2010

எம்மார் நிறுவனத்திடம் இருந்து ரூ93கோடி உத்தரவாத தொகை பெற நிதியமைச்சகம் தலையிட வேண்டும்

புதுடெல்லி, நவ. 16: எம்மார் நிறுவனத்திடம் இருந்து ரூ93 கோடி வங்கி உத்தரவாதத் தொகையை பெறுவதற்காக நிதித்துறை அமைச்சகம் தலையிட வேண்டும் என்று மத்திய நகர்ப்புற அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள், வீராங்கனைகள் தங்குவதற்காக அக்ஷர்தாம் கோயில் அருகில் ரூ.1000 கோடிக்கும் அதிகமான செலவில் விளையாட்டு கிராமம் உருவாக்கப்பட்டது. இதை கட்டி முடிக்க எம்மார் எம். ஜி.எப். என்னும் கட்டுமான நிறுவனத்துக்கு டெல்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) கான்ட்ராக்ட் வழங்கியது.

விளையாட்டு கிராமத்தின் கட்டுமானத்தை குறித்த நேரத்தில் முடிக்காததோடு, பல்வேறு குறைபாடுகள் நடந்திருப்பதையும், முறைகேடுகள் நடந்திருப்பதையும் டெல்லி மேம்பா ட்டு ஆணையம் கண்டுபிடித்து, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு அறி க்கை அனுப்பியது.

இதைத் தொடர்ந்து, எம்மார் நிறுவனம் சார்பில் 2 வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள ரூ183 கோடி உத்தரவாதத் தொகையை நஷ்டஈட்டுத் தொகையாக பறிமுதல் செய்ய வேண்டுமென மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை உத்தரவிட்டது. ஆனால், அரசின் நடவடிக்கையை எதிர்த்து எம்மார் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், வங்கி உத்தரவாதத் தொகையாக எம்மார் நிறுவனம் செலுத்தியுள்ள தொகையில் இருந்து ரூ90 கோடியை டிடிஏ எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியது.

எஞ்சிய ரூ93 கோடியையும் பெறுவதற்காக மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் உதவியை நகர்ப்புற வளர்ச்சித்துறை நாடியுள்ளது. இதுகுறித்து, நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரூ90 கோடி உத்தரவாதத் தொகையைத்தான் டிடிஏவால் பெற முடிந்துள்ளது. வங்கி செய்த தவறால் ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டுள்ள மொத்த உத்தரவாதத் தொகையையும் பெற முடியவில்லை. அதனால், எஞ்சிய உத்தரவாதத் தொகை ரூ93 கோடியை எம்மார் நிறுவனத்தின் வங்கிக்கணக்கிலிருந்து பெறும் வகையில் இந்த விவகாரத்தில் மத்திய நிதித்துறை அமைச்சகம் தலையிட வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளோம். மொத்த உத்தரவாதத் தொகையையும் டி.டி.. பெறமுடியாத வகையில் வங்கி செய்த தவறை நிதியமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காகவும், எஞ்சிய உத்தரவாதத் தொகையை டி.டி.. பெறுவதற்காகவும் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதோடு, வங்கியின் தவறை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென வங்கியின் உயரதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளோம்" என்றார்.

ஆனால், எம்மார் நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "விளையாட்டு கிராம கட்டு மானத்தை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது ஏன்? என்பது பற்றி விளக்க ஒரு வாரம் அவகாசம் அளிப்பதாக அக்டோபர் 16ம்தேதி டிடிஏ கூறியிருந்தது. அதோடு, ரூ80 கோடியை நஷ்ட ஈட்டுத் தொகையாக கேட்டிருந்தது. ஆனால், வங்கி உத்தரவாதத் தொகை முழுவதையும் (ரூ183 கோடி) கேட்பது சட்ட விரோதம். அதற்கு தடைவிதிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.