Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை: மேயர் தகவல்

Print PDF

தினமணி 19.08.2009

மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை: மேயர் தகவல்

வேலூர், ஆக. 17: மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வேலூர் மேயர் ப. கார்த்திகேயன் தெரிவித்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரோட்டரி இண்டர்நேஷனல் இணைந்து பள்ளி மாணவர், மாணவியர்களுக்கான வேலூர் ஒலிம்பியாட் 2009 தடகள விளையாட்டுப் போட்டிகளை திங்கள்கிழமை நடத்தியது.

கோட்டையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளி அரங்கில் இந்த போட்டிகளை எம்எல்ஏ சி. ஞானசேகரன் தொடங்கி வைத்தார். இதில் 150 பள்ளிகளிலிருந்து 1,500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா மாலையில் நடைபெற்றது.

மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து மேயர் பேசியதாவது:

மாணவர்கள் படிக்கும் காலத்தில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். விளையாடும் நேரத்தில் விளையாட்டும், படிக்கும் நேரத்தில் படிப்பும், டிவி பார்க்க வேண்டிய நேரத்தில் டிவியும் என உங்களின் நடவடிக்கைகளை வரையறுத்துக் கொண்டு, நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

மாணவர்களின் நலன் கருதி மாநகராட்சிப் பள்ளிகளில் மின்விளக்கு, மின்விசிறி, மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகளை செய்து வருகிறோம். இப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜி. மூர்த்தி, ரோட்டரி ஒலிம்பியாட் ஒருங்கிணைப்பாளர் கே. பாண்டியன், மாவட்ட ஆளுநர் டபுள்யூ. ஆனந்த், சின்னத்திரை நடிகர் பி.கே. கமலேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் கே. மதிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் வெற்றிபெற்று முதல் இரு இடங்களை பெற்ற மாணவ, மாணவியர் வரும் 25-ம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.