Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவுப் பணியாளர்களுக்கு நகராட்சி பட்டா வழங்கக் கோரிக்கை

Print PDF

தினமணி 09.09.2010

துப்புரவுப் பணியாளர்களுக்கு நகராட்சி பட்டா வழங்கக் கோரிக்கை

பரமக்குடி, செப்.8: பரமக்குடி நகராட்சிக்குச் சொந்தமான காந்தி காலனியில் துப்புரவுப் பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட குடியிருப்பு வீடுகளுக்கு அவர்களது பெயரில் பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தினர் புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து காந்தி காலனி துப்புரவுத்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சி.அம்மாசி கூறியது: காந்தி காலனியில் நகராட்சியில் துப்புரவு பணி செய்யும் மற்றும் ஓய்வு பெற்றோர் என 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த காலனிப் பகுதி 1949-ம் ஆண்டு பரமக்குடி பஞ்சாயத்துத் தலைவராக இருந்த நாராயணன் என்பவர் தாண்டவராயன் செட்டியாரிடமிருந்து துப்புரவுப் பணியாளர்களுக்காக நகராட்சியின் பெயரில் வாங்கப்பட்டு, 1950-ல் 12 பயனாளிகளுக்கு மண் சுவருடன் கூடிய ஓட்டு வீடு கட்டிகொடுக்கப்பட்டது. பின்பு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வீடுகள் இடிந்ததால் காமராஜர் முதல்வராக இருந்த போது 24 வீடுகளும், கருணாநிதி முதல்வராக இருந்தபோது 18 வீடுகளும் கட்டித்தரப்பட்டன. இந்த வீடுகளுக்கு நகராட்சி பெயரில் வரி விதிக்கப்பட்டு, பயனாளிகள் வாடகையாக குறிப்பிட்ட தொகை துப்புரவுப் பணியாளர் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 1979-ல் ஏற்பட்ட கலவரத்தில் இக்காலனி வீடுகள் அனைத்தும் சேதபடுத்தப்பட்டன. பின்பு அனைத்து பணியாளர்களும் தங்களது சொந்த செலவில் வீடுகள் கட்டி, தற்போது இப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இதனால் இப்பகுதியில் நீண்டநாள்களாக வசிக்கும் துப்புரவுப் பணி செய்யும் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அவரவர் வீடுகளுக்கு மனைப்பட்டா வழங்கிடவும், சொத்து வரிவிதிப்பினை அவரவர் பெயரில் ஏற்படுத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.