Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழை காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்

Print PDF

தினமணி 02.09.2010

மழை காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை, செப். 1: புதுக்கோட்டையில் "வர்ஷா பீமா' மழைக் காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம வள மையம் மற்றும் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, முன்னோடி விவசாயி ஜி.எஸ். தனபதி தலைமை வகித்தார். முன்னோடி விவசாயி எஸ்.வி.காமராசு முன்னிலை வகித்தார். இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் வி. பழனியப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். முகாமில் அவர் பேசியது:

""மத்திய அரசால் நிறுவப்பட்டுள்ள வேளாண் காப்பீட்டு நிறுவனம் விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு மழைக் காப்பீட்டுத் திட்டத்தினை நிகழாண்டு முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர நாகை, தஞ்சாவூர், திருவாருர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வரையறுக்கப்பட்ட பகுதியில் பருவ கால மழையின் அடிப்படையில் குறைவான விளைச்சல் இழப்பீட்டை காப்பீடு மூலம் ஈடு செய்வதாகும். இதுவரை இந்நிறுவனம் தமிழ்நாட்டில் | 124 கோடியை காப்பீடாக அளித்துள்ளது. மேலும் விவரங்களை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம வள மற்றும் அறிவு மையங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்'' என்றார். தொடர்ந்து காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வதற்கான விண்ணப்பங்களை விவசாயிகளிடம் அவர் அளித்தார்.

நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். ராஜ்குமார் பேசுகையில், ""புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அன்னவாசல் கிராம வள மையம் மற்றும் வம்பன் நால்ரோடு அத்தாணி, ஓணாங்குடி, அரிமளம், புள்ளான்விடுதி, பரம்பூர், மலைக்குடிப்பட்டி, ராஜாளிப்பட்டி, நெடுவாசல், மேலப்பட்டி மேற்பனைக்காடு ஆகிய கிராம அறிவு மையங்களில் இத்திட்டம் தொடர்பான விவரங்களைப் பெறலாம். மேலும் இது தொடர்பான விவரங்களை 94437 80661 மற்றும் 98659 22115 ஆகிய கைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம்'' என்றார் அவர். தொடர்ந்து, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எல். பிரபாகரன், முன்னோடி விவசாயி பி. முருகேசன் ஆகியோர் பேசினர். முன்னதாக, ரைட்ஸ் நிறுவன இயக்குனர் ஆர்.அன்பழகன் வரவேற்றார். நிறைவில், தேசிய இணையக் கல்விக் கழக பிரதிநிதி எஸ். விஜிக்குமார் நன்றி கூறினார்.