Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மகாராஷ்டிர அரசு முடிவு மும்பையை சர்வதேச நகரமாக உருவாக்க 3 புதிய திட்டங்கள்

Print PDF

தினகரன் 05.08.2010

மகாராஷ்டிர அரசு முடிவு மும்பையை சர்வதேச நகரமாக உருவாக்க 3 புதிய திட்டங்கள்

மும்பை, ஆக. 5: மும்பையை சர்வதேச நகரமாக உருவாக்க மகாராஷ்டிரா அரசு, சிட்டி ஆப் சிட்டி(நகரின் நகரம்), சிட்டி ஆப் கனெக்ஷன்(இணைப்பு நகரம்), சிட்டி ஆப் ஐலேண்ட்(தீவு) நகரம் என்ற பெயர்களில் மூன்று புதிய திட்டங்களை வகுத்துள்ளது.

மும்பை மற்றும் அதை சுற்றியிருக்கும் நகரப்பகுதிகளின் மேம்பாட்டுக்காக மகாராஷ்டிரா அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இந்த வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காக மும்பை பெருநகர பிராந்திய வளர்ச்சி ஆணையம் என்ற ஏஜென்சி உருவாக்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் கீழ் மும்பை, புறநகர்ப்பகுதிகள் மட்டுமல்லாது தானே, ராய்கட் மாவட்டங்களும், நவி மும்பையில் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அரசு வகுத்துள்ள புதிய திட்டத்தின் படி புனே மற்றும் நாசிக் நகரங்களும் மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் கீழ் விரைவில் கொண்டு வரப்படவுள்ளது.

மும்பை மற்றும் மும்பையை சுற்றியிருக்கும் நகரங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை ஆய்வு செய்வதற்காக சிங்கப்பூரை சேர்ந்த சபர்பனா கார்பரேஷன் என்ற நிறுவனம் நியமிக்கப்பட்டிருந்தது. இந்த நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையை தயாரித்து புதிய வளர்ச்சித் திட்டங்களின் வரைவுகளை அரசிடம் தாக்கல் செய்துள்ளது.

அந்நிறுவனத்தின் பரிந்துரைகள்படி சிட்டி ஆப் சிட்டி(நகரின் நகரம்), சிட்டி ஆப் கனெக்ஷன்(இணைப்பு நகரம்), சிட்டி ஆப் ஐலேண்ட்(தீவு) நகரம் என்ற பெயர்களில் மூன்று புதிய திட்டங்களை செயல்படுத்த மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மும்பையை முதலில் உலகத்தரம் வாயந்த நகரமாகவும் பின்னர் குளோபல்(சர்வதேச) நகரமாகவும் உருமாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டப்பணிகளை நிறைவேற்றும் பொறுப்பு மும்பை பெருநகர பிராந்திய வளர்ச்சி ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அரசு வகுத்துள்ள மூன்று புதிய திட்டங்கள் பற்றிய விவரம் வருமாறு:

சிட்டி ஆப் சிட்டி:

இந்த திட்டத்தின் கீழ், விரார் முதல் அலிபாக் வரையிலான பகுதிகளில் 5 புதிய நகரங்கள் உருவாக்கப்படும். நவி மும்பை அருகிலும் அலிபாக்கில் உள்ள ரேவஸ் என்ற இடத்திலும் புதிய விமான நிலையங்கள் அமைப்பது இத்திட்டத்தில் அடங்கும்.

சிட்டி ஆப் கனெக்ஷன்:

இந்த திட்டத்தின் படி, முமபையை சுற்றியிருக்கும் அனைத்து சிறிய நகரங்களும் சாலை மார்க்கமாக மட்டுமல்லாது, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், மோனோ ரயில், டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு ரயில் மூலம் இணைக்கப்படும்.

சிட்டி ஆப் ஐலேண்ட்:

மும்பையில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறையை போக்குவதற்காக கடல் மற்றும் கழிமுகப் பகுதிகளை மேடாக்கி புதிய நிலங்கள் உருவாக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.