Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நமக்கு நாமே திட்டத்துக்கு ரூ. 1.05 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 01.08.2009

நமக்கு நாமே திட்டத்துக்கு ரூ. 1.05 கோடி ஒதுக்கீடு


தேனி, ஜூலை 31: தேனி மாவட்டத்தில் 2009-10-ம் ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்த அரசு ரூ. 1.05 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக ஆட்சியர் பி. முத்துவீரன் தெரிவித்தார்.

இதில் ரூ. 70.65 லட்சம் அரசுப் பங்குத்தொகை, ரூ. 35.33 லட்சம் மக்கள் பங்குத்தொகை. இதுவரை பொதுமக்கள் பங்குத் தொகை ரூ. 11.11 லட்சம் வரப்பெற்றுள்ளது. இதில் 6 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிக் கட்டடங்கள், பள்ளிக் கழிவறைகள், மருத்துவமனைகள், துணை சுகாதார நிலையங்கள், அரசு கால்நடை மருத்துவமனைகள், ரேஷன் கடைகள், நேரடி கொள்முதல் நிலையங்கள், பால் உற்பத்தி கூட்டுறவு சங்கம் மற்றும் குளிரூட்டும் நிலையம், அரசு தங்கும் விடுதிகள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு நிலையங்கள், அங்கன்வாடி மற்றும் கால்நடை மருத்துவமனைகளுக்கு தளவாடச் சாமான்கள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்தல் உள்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் இத் திட்டத்தில் பெரிய அளவில் பங்கேற்க ஏதுவாக பொதுமக்களோ அல்லது பணிக்கான பங்களிப்பை அளித்தவரோ பணியைத் தாங்களாகவோ அல்லது வேறு முகவர்கள் மூலமாகச் செய்திட விரும்பினால் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்யும்போது எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்கள் பங்களிப்புத் தொகையை "மாவட்ட ஆட்சித் தலைவரின் நமக்கு நாமே திட்டக் கணக்கு' என்ற பெயரில் கேட்புக் காசோலையாக எடுத்துத் தர வேண்டும். இத் திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு பொதுமக்களை ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.